“செம்பரம்பாக்கம் போல் சாத்தனூர் சம்பவம் நடந்துள்ளது” – அன்புமணி ராமதாஸ்!

“அதிமுகவின் செம்பரம்பாக்கம் சம்பவம் போல் தற்போது திமுகவில் சாத்தனூர் சம்பவம் நடந்துள்ளது” என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். ஃபெஞ்சல் புயலால் தமிழ்நாட்டின் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மழை வெள்ளத்தால்…

“செம்பரம்பாக்கம் போல் சாத்தனூர் சம்பவம் நடந்துள்ளது” - அன்புமணி ராமதாஸ்!

“அதிமுகவின் செம்பரம்பாக்கம் சம்பவம் போல் தற்போது திமுகவில் சாத்தனூர் சம்பவம் நடந்துள்ளது” என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

ஃபெஞ்சல் புயலால் தமிழ்நாட்டின் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு அதிகம் தண்ணீர் தேங்கி நின்ற பகுதிகளில் நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று கடலூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு, அதிகம் தண்ணீர் தேங்கி நின்ற பகுதிகளில் பாமக சார்பில் இலவச மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது. 

இதில் அக்கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்று பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்து, ஆலோசனைகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

“செம்பரம்பாக்கம் சம்பவம் போல் தற்போது சாத்தனூர் சம்பவம் நடந்துள்ளது. இந்த சாத்தனூர் சம்பவத்தால் கிட்டதட்ட 20 பேர் இறந்துள்ளனர். இரவு நேரத்தில் வினாடிக்கு 1லட்சத்து 70 ஆயிரம் கன அடிநீர், மக்களுக்கு எந்தவித முன்னறிவிப்பும் இன்றி திறந்து விடப்பட்டுள்ளது.

சாதாரணமாக இந்தநீர் அணையிலிருந்து கடலூர் வருவதற்கு 1 நாள் அல்லது ஒன்றரை நாள் ஆகும். ஆனால் தற்போது தென்பெண்ணாயாற்றில் மணல் இல்லை. மணல் கொள்ளையால் கிட்டதட்ட 6 முதல் 8 மணிநேரத்திற்குள் தண்ணீர் வந்துவிட்டது. உயிரை காக்க வெளியே நின்ற மக்களின் உடமைகள் பறிபோயின. 20 ஆயிரத்திற்கும் அதிகமான கால்நடைகள் இறந்துவிட்டன. குடிசை வீடுகள் சேதமடைந்துள்ளன. வட தமிழ்நாட்டில் 4 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதற்கு முழு நிவாரணம் அரசு வழங்க வேண்டும்.

இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களுக்கும் அரசு இழப்பீடு வழங்க வேண்டும். சென்னையில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.6 ஆயிரம், எங்களுக்கு ஏன் ரூ.2 ஆயிரம் என பாதிக்கப்பட்ட மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். அனைவருக்கும் சமமாக வழங்க வேண்டும். வட தமிழ்நாடு என்றால் திமுகவிற்கு எளக்காரம். அனைத்தையும் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். மத்திய அரசு இன்னும் நிதி ஒதுக்க வேண்டும். மத்திய அரசு ஒதுக்கியுள்ள நிதி நிச்சயமாக போதுமானது அல்ல. குறைந்தது 20 ஆயிரம் கோடி ரூபாய் மத்திய அரசு அடுத்த முறை கொடுக்க வேண்டும்” என தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.