”ஜனநாயகனின் வெளியீட்டுத் தேதி ரசிகர்களுக்கு ஒரு திருவிழாவாக இருக்கும்” – ஜி.வி. பிரகாஷ் குமார் பதிவு…..!

ஜனநாயகன் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியானது ரசிகர்களுக்கு ஒரு திருவிழாவாக இருக்கும் என்று இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் பதிவிட்டுள்ளார்.

நடிகர் விஜய் – இயக்குநர் எச்.வினோத் கூட்டணியில் உருவாகியுள்ள படம் ‘ஜனநாயகன்’. இந்த படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் படத்திற்கு இதுவரை தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுள்ளது

இந்த சூழலில் தணிக்கை சான்றிதழ் வழங்கப்படாததை எதிர்த்து ஜனநாயகன் படத்தின் தயாரிப்பு நிறுவனமானது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. நேற்று முன்தினம் விசாரிக்கப்பட்ட இந்த வழக்கில் 9-ம் (இன்று) தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அதன்படி இன்று நீதிபதி பி.டி.ஆஷா அளித்த தீர்ப்பில், திரைப்படத்தை மறு ஆய்வுக்கு அனுப்பிய உத்தரவை ரத்து செய்தும், ஜனநாயகன் திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்க  தணிக்கை வாரியத்திற்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அதே நேரம் ஜனநாயகன் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்க இடப்பட்ட உத்தரவை எதிர்த்து தணிக்கை வாரியத் தலைவர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு  செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று பிற்பகல் அவசர வழக்காக விசாரிக்கபடும் என்று தெரிவிக்கப்படுள்ளது.

இந்த நிலையில் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் எக்ஸ் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ஜனநாயகன் அனைத்து தடைகளையும் கடந்து, விரைவில் திரையில் மாயாஜாலத்தை நிகழ்த்தப் போகிறது… வெளியீட்டுத் தேதியானது அனைத்து ரசிகர்களுக்கும் ஒரு திருவிழாவாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.