“பிரச்னை பயங்கரவாதிகளுடன்தான் , பாகிஸ்தான் ராணுவத்துடன் அல்ல” – விமானப்படை உயர் அதிகாரி ஏ.கே.பார்தி விளக்கம்!

பிரச்னை பயங்கரவாதிகளுடன் தான் , பாகிஸ்தான் ராணுவத்துடன் அல்ல என விமானப்படை உயர் அதிகாரி ஏ.கே.பார்தி விளக்கம் கொடுத்துள்ளார்.

இந்தியா – பாகிஸ்தான் இடையே நடந்த தாக்குதல் குறித்தும்  இந்திய விமானப்படையின் செயல்பாடு குறித்தும் விமானப்படை உயர் அதிகாரிகள்  இன்று கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது ஏர் மார்ஷல் ஏ.கே.பார்தி பேசியதாவது, “பயங்கரவாதம் மற்றும் பயங்கரவாத உள்கட்டமைப்புக்கு எதிரானது நமது போராட்டம் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம். பயங்கரவாதிகளுக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கையில் பாகிஸ்தான் இராணுவம் தலையிட்டது. பாகிஸ்தான் ராணுவமே அவர்களின் இழப்புகளுக்குப் பொறுப்பு. நமது அரசாங்கம் இராணுவ உள்கட்டமைப்பை மேம்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானின் ஏவுகணைகள் இலக்கைத் தவறவிட்டது நீண்ட தூர ராக்கெட்டுகள் கூட அவர்களுக்கு வேலை செய்யவில்லை .கடந்த சில ஆண்டுகளில், பயங்கரவாத நடவடிக்கைகளின் தன்மை மாறிவிட்டது. அப்பாவி பொதுமக்கள் தாக்கப்படுகிறார்கள். பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல்களில் உள்நாட்டு வான் பாதுகாப்பு ஆயுதங்களான ஆகாஷ் எஸ்ஏஎம் மற்றும் ட்ரோன் எதிர்ப்பு அமைப்புகளின் உயர் மட்ட செயல்திறனை வெளிப்படுத்தியது.

சீனாவில் தயாரிக்கப்பட்ட ஏவுகணைகள் நமது பாதுகாப்பு படையின் திறமையின் மூலம் சூட்டு வீழ்த்தப்பட்டது. எங்களது முயற்சிக்கு அரசு மட்டுமின்றி அரசின் ஒவ்வொரு நிறுவனங்களும் முகமைகளும் முழுமையான ஆதரவை அளித்தது. எங்களது நோக்கங்களையும் இலக்குகளையும் அடைவதற்கு அது தூண்டுதலாக இருந்தது.

140 கோடி இந்திய மக்களுக்கும் அவர்கள் வழங்கிய ஆதரவுக்கு நன்றி தெரிவிக்கிறோம். இந்தியாவின் பிரச்னை பயங்கரவாதிகளுடன் தான். பாகிஸ்தான் இராணுவத்துடன் அல்ல என்பது தெளிவு படுத்தியும் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் அரங்கேற்றியுள்ளது. பயங்கரவாதிகளின் பிரச்சனையை பாகிஸ்தான் ராணுவம் தங்களுடைய பிரச்சனையாக மாற்றியுள்ளது.

இந்தியாவின் வான்வெளி பாதுகாப்பு அமைப்புகள் சிறப்பாக செயல்பட்டு இந்திய தரப்பில் சேதங்களை வெகுவாக குறைத்துள்ளது. சீனாவில் தயாரிக்கப்பட்ட தளவாடங்களை பாகிஸ்தான் பயன்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலை இந்தியாவின் வான்வெளி பாதுகாப்பு அமைப்புகளை எதிர்த்தாக்குதல் மூலம் தடுத்துள்ளது. இந்தியாவின் பல அடுக்கு வான்வெளி பாதுகாப்பு அமைப்புகளால் பாகிஸ்தானின் தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டுள்ளது”

இவ்வாறு ஏர் மார்ஷல் ஏ.கே.பார்தி தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.