ஆடி வெள்ளியை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள மலர் சந்தைகளில் பூக்களின் விலை அதிகரித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை மலர் சந்தைக்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் அதிகளவில் வியாபாரிகள் வருகை தருவது வழக்கம். ஆடி வெள்ளியை முன்னிட்டு, இங்கு வியாபாரிகள் அதிகளவில் வருகை தந்தனர். இதனால் பூக்களின் விலை வழக்கத்தை விட மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. மல்லிகைப்பூ ஒரு கிலோ 500 முதல் 600 ரூபாய் வரையும், முல்லைப் பூ கிலோ 250 முதல் 350 ரூபாய் வரையும் விற்பனையானது. இதேபோல், சம்பங்கி, ரோஜா, கனகாம்பரம் உள்ளிட்ட பூக்களின் விலையும் அதிகரித்துள்ளது.
இதேபோல் ஆடி வெள்ளியை முன்னிட்டு, மதுரையில், மல்லிகை பூ கிலோ 600 ரூபாய்க்கு விற்பனையானது. மதுரை மாட்டுத்தாவணியில் உள்ள மலர் சந்தையில், பூக்களின் விலை அதிகரித்துள்ளது. பிச்சி பூ கிலோ 500 ரூபாய்க்கும், முல்லை பூ கிலோ 400 ரூபாய்க்கும், சம்பங்கி 200 ரூபாய்க்கும், செவ்வந்தி 250 ரூபாய்க்கும் விற்பனையானது. இனிவரும் நாட்களிலும் பூக்களின் விலை அதிகமாக இருக்கும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
- பி.ஜேம்ஸ் லிசா







