உலகத் தமிழர்களை ஒருங்கிணைக்கவும், மொழி வளர்ச்சிக்காகவும் நடைபெறும் உலகத் தமிழ் மாநாடு மலேசியாவில் நாளை முதல் வரும் 23-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
தமிழ் மொழிக்கு உலகளாவிய அளவில் கவனிப்பை உருவாக்க வேண்டும் என்பதற்காக தனிநாயகம் அடிகள் உள்ளிட்ட தமிழறிஞர்களின் பெருமுயற்சியால் உருவாக்கப்பட்டது உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம். உலகத் தமிழறிஞர்களை ஒன்று சேர்த்து அவர்களது ஆராய்ச்சிகளை வெளிப்படுத்த உதவும் வகையில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகத் தமிழ் மாநாடு நடத்த உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் திட்டமிட்டது.
இந்த உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் தொடங்கிய 1966-ம் ஆண்டு முதல் இதுவரை மொத்தம் 10 உலகத் தமிழ் மாநாடுகள் நடைபெற்றுள்ளன. இதுவரை தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, தஞ்சாவூரிலும், இலங்கை, மலேசியா, அமெரிக்கா, பிரான்ஸ், மற்றும் மொரீசியஸில் உலகத் தமிழ் மாநாடுகள் நடைபெற்றுள்ளன. இந்நிலையில், 11வது உலகத் தமிழ் மாநாடு மலேசியாவில் நடைபெற உள்ளது.
உலகத் தமிழர்களை ஒருங்கிணைக்கவும், மொழி வளர்ச்சிக்காகவும் நடைபெறும் மாநாட்டில் 100க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து தமிழறிஞர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். அத்துடன், தமிழ்நாட்டின் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து 3 நாட்கள் நடைபெறவுள்ள மாநாட்டில் 100 நாடுகளைச் சேர்ந்த சுமார் 2,500 தமிழறிஞர்கள், லட்சக்கணக்கான பார்வையாளர்கள் பங்கேற்கவுள்ளனர்.
ரூ.25 கோடி செலவில் நடைபெறவுள்ள இந்த உலகத்தமிழ் மாநாட்டில் சார்ஜாவில் ஜூலையில் நடைபெறுவதாக முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், சில நிர்வாக காரணங்களினால் சார்ஜாவுக்கு பதிலாக மலேசியாவில் நாளை முதல் 23-ம் தேதி வரை மலேசியா பல்கலை வளாகத்தில் நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏற்கனவே 3 உலகத் தமிழ் மாநாடுகள் மலேசியாவில் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து அங்கிருந்து நமது செய்தியாளர் சிரில் தேவா அளித்த காணொலியைக் காண…







