சென்னை எம்.ஜி.ஆர். நகர் பாரதிதாசன் தெருவில் இரண்டு நாட்களுக்கு முன்பு அதிகாலை நடைபயிற்சி சென்ற 3 பேரிடம் கத்திமுனையில் மிரட்டி செல்போன் பறித்துக்கொண்டு 3 பேர் கொண்ட கும்பல் தப்பி ஓடியது. செல்போனை பறி கொடுத்தவர்கள் இது குறித்து எம்.ஜி.ஆர். நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது 17 வயது சிறுவன் ஒருவன் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.
சிசிடிவியில் பதிவான காட்சிகளை வைத்து 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்து, காவல்நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சிறுவனுடன் சேர்ந்து எம்.ஜி.ஆர்.நகரை சேர்ந்த 20 வயதான அபிஷேக் மற்றும் 18 வயதான சதீஷ் ஆகியோர் கத்திமுனையில் செல்போன் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார், அபிஷேக்கை அவரது வீட்டில் வைத்து கைது செய்தனர். அவரிடம் இருந்து செல்போனை ஆய்வு செய்தபோது, அபிஷேக் தனது நண்பர்களுடன் கஞ்சா செடிகளுடன் செல்பி எடுத்துக்கொண்ட படங்கள் அதிகளவில் இருந்துள்ளது. இதனைகண்ட போலீசார் அபிஷேக்கிடம் கஞ்சா செடி குறித்தும், புகைப்படங்களை காட்டியும் விசாரணை நடத்தினர்.
பின்னர் போலீசார் அவரது வீட்டை சுற்றிலும் சோதனை மேற்கொண்டனர். அப்போது, வீட்டின் மொட்டை மாடியில் தண்ணீர் தொட்டி அருகே ரகசியமாக மண் தொட்டிகளில் உயர் ரக கஞ்சா செடிகள் வளர்த்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து கஞ்சா செடியை கைப்பற்றி அபிஷேக்கை காவல்நிலையம் அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தினர்.
போலீசார் நடத்திய விசாரணையில், சென்னையில் போலீசார் கஞ்சா விற்பனையை ஒடுக்கி வருவதால், கஞ்சாவை வெளியில் வாங்க முடியாமல் அபிஷேக் தவித்து வந்துள்ளார். இதனையடுத்து தாமே கஞ்சாவை உற்பத்தி செய்யலாம் என்று முடிவு செய்துள்ளார். இதற்காக கஞ்சா விதைகளை மண் தொட்டியில் போட்டு, செடியாக வளர்த்து அதனை பயன்படுத்தி வந்ததும் விசாரணையில் அம்பலமானது.
இதை தொடர்ந்து வீட்டில் ரகசியமாக கஞ்சா செடிகள் வளர்த்து வந்த பிரபல வழிப்பறி கொள்ளையன் அபிஷேக் மற்றும் அவனது கூட்டாளி சதீஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் இருந்து கஞ்சா செடிகள் மற்றும் செல்போன்களை பறிமுதல் செய்தனர்.








