சர்க்கரை வியாதி காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பிதாமகன் படத்தின் தயாரிப்பாளர் வி.ஏ.துரை மருத்துவ உதவி வேண்டி வீடியோ வெளியிட்டுள்ளார்.
விக்ரம், சூர்யா, விஜயகாந்த், சத்யராஜ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களை வைத்து, என்னம்மா கண்ணு, லூட்டி, லவ்லி, விவரமான ஆளு, பிதாமகன், கஜேந்திரா உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்தவர் தயாரிப்பாளர் வி.ஏ.துரை. ஆர்மபத்தில் பிரபல தயாரிப்பாளர் ஏ.எம்.இரத்தினத்திடம் தயாரிப்பு நிர்வாகத்தில் பங்கெடுத்தவர் பின்னர் சொந்தமாக, எவர்கிரீன் இன்டர்நேஷனல் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியவர்.
விக்ரம் – சூர்யா நடித்து 2003-ம் ஆண்டு வெளியான பிதாமகன் திரைபபடம் விமர்சன ரீதியிலும், வசூல் ரீதியிலும் மாபெரும் வெற்றி அடைந்தது. இதனால் அப் படப்பிடிப்பின் போதே, தயாரிப்பாளர் வி.ஏ. துரை, மீண்டும் ஒரு திரைப்படத்தை தனக்கு இயக்கிக் கொடுக்குமாறு இயக்குநர் பாலாவிற்கு 25 லட்ச ரூபாய் முன் பணம் கொடுத்ததாக கூறியும், அதற்குப் பிறகு பாலா மற்றும் வி.ஏ.துரை ஆகியோர் இணைந்து பணியாற்றாததால் அப்பணத்தை திருப்பி தரக்கோரியும், 19 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 2022-ஆம் ஆண்டு, செப்டம்பர் 14-ஆம் தேதி இயக்குநர் பாலாவின் அலுவலகத்திற்கு சென்று உள்ளிருப்பு போராட்டம் எல்லாம் நடத்தினார் வி.ஏ துரை.
ஆனால் அப்போது அவருக்கு முறையான பதில் ஏதும் அளிக்காமல், இயக்குநர் பாலா அலுவலக ஊழியர்கள் வி.ஏ.துரையை அலுவலகத்திலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றி, பின் தயாரிப்பாளர் சங்கம் வரை இப்பிரச்சனை அன்று கொண்டு செல்லப்பட்டது. ஆனாலும் தற்போது வரை பாலாவிற்கு பணம் கொடுத்த விவகாரத்தில் எந்த தீர்வும் எட்டப்பபடவில்லை.
இந்த நிலையில் தற்போது அவரது வாழ்க்கை சூழ்நிலை மிகவும் மோசமாக உள்ளதாகவும், வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டு, பார்த்துக்கொள்ள கூட ஆள் இல்லாமல், காலில் ஆறாத ரணத்துடன், சாலிகிராமத்தில் உள்ள அவரது நண்பர் ஒருவரின் வீட்டில் தஞ்சம் அடைந்துள்ளார். மிகுந்த சிரமத்தில் இருக்கும் அவருக்கு யாராவது உதவினால் நனறாக இருக்கும் என்று, துரையின் நண்பர் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுளளார்.
அந்த வீடியோ பதிவில் சர்க்கரை நோயால் அதிகம் பாதிக்கப்பட்டு, அதனால் காலில் உள்ளே எலும்பு தெரியும் அளவிற்கு புண்கள் ஏற்பட்டு, கால்கள் கொஞ்சம் கொஞ்சமாக அரித்துவிடும் நிலையில் உள்ளார். மேலும் அவரை கவனித்துக் கொள்ள ஆளில்லாத பரிதாபமான நிலைமையிலும் இருக்கிறார். இவரின் இந்த வீடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் தற்போது அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. மேலும் யாராவது உதவ முன் வந்தால் நன்றாக இருக்கும் என்று தயாரிப்பாளர் வி.ஏ துரை தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
- பி.ஜேம்ஸ் லிசா










