”நிலத்திற்கு இழப்பீடு பெற்றுவிட்டு மனுதாரர் மறுபுறம் போராடவும் செய்கிறார்!” – என்.எல்.சி வழக்கில் தமிழ்நாடு அரசு தரப்பு வாதம்!

என்.எல்.சி-க்காக நிலம் கையகப்படுத்தப்படுவது தொடர்பான வழக்கில் நிலத்திற்கு இழப்பீடு பெற்றுக் கொள்ளும் மனுதாரர், மற்றொருபுறம் திட்டத்தை எதிர்க்கிறார் என தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. என்.எல்.சி. கையகப்படுத்திய நிலத்தில் அறுவடை முடியும் வரை விவசாயிகளுக்கு…

என்.எல்.சி-க்காக நிலம் கையகப்படுத்தப்படுவது தொடர்பான வழக்கில் நிலத்திற்கு இழப்பீடு பெற்றுக் கொள்ளும் மனுதாரர், மற்றொருபுறம் திட்டத்தை எதிர்க்கிறார் என தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்.எல்.சி. கையகப்படுத்திய நிலத்தில் அறுவடை முடியும் வரை விவசாயிகளுக்கு எந்த தொந்தரவும் கொடுக்க கூடாது எனக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட விளை நிலத்தின் உரிமையாளர் முருகன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

மேலும் நிலம் கையகப்படுத்தல் சட்டப்பிரிவு 101 ன் படி நிலத்தை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்றும் மனுதாரர் முருகன் தரப்பு முறையிட்டது.

இவ்வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில், நில கையகப்படுத்தும் ஒப்பந்தப்படி என்.எல்.சி-யில் வேலைவாய்ப்பு உள்ளிட்ட வாக்குறுதிகளை 1989லிருந்தே அந்நிறுவனம் நிறைவேற்றவில்லை. என்.எல்.சி. பணிகளில் வட மாநிலத்தவர் தான் பணியமர்த்தப்படுகின்றனர். கூலி மற்றும் ஒப்பந்த பணிகளில் மட்டுமே நிலத்தை வழங்கியவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது. அனைத்து பணிகளையும் நிறுத்த நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று வாதிடப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, பணிகளில் வட மாநிலத்தவர் தென் மாநிலத்தவர் என பிரிக்காதீர்கள். நம் மாநிலத்தை சேர்ந்தவர்களும் வெளிமாநிலங்களுக்கு சென்று பிரகாசித்து வருகிறார்கள். நாட்டை பிரித்து பார்ப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அறிவுறுத்தினார்.

பின்னர் தமிழ்நாடு அரசு சார்பில் வைக்கப்பட்ட வாதங்களாவது: ஒரு பகுதியில் நிலத்திற்கு இழப்பீடு பெற்றுக் கொள்ளும் மனுதாரர், மற்றொரு பகுதியில் திட்டத்தை எதிர்க்கிறார். இவ்வளவு பெரிய போராட்டமாக மாறுவதற்கு அரசியல் கட்சியினரின் தூண்டுதல்தான் காரணம். மனுதாரர் தரப்பை அரசியலாக்க வேண்டாம் என உத்தரவிட வேண்டும் இவ்வாறு வாதிடப்பட்டது.

தமிழ்நாடு அரசின் இந்த கருத்துக்கு என்.எல்.சி.-யும் ஆதரவு தெரிவித்தது.

இதனை அடுத்து வாதிட்ட மனுதாரர் தரப்பு,  அரசியல் செய்யும் நோக்கம் ஏதும் இல்லை. பயிர்களை இழந்த விவசாயி என்ற முறையிலேயே வழக்கு தொடர்ந்துள்ளேன். அரசியல் கட்சிகளும் போராடுகின்றன என்று வாதிட்டது.

அப்போது பேசிய நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் அரசியல் செய்வதற்காகத்தான் கட்சிகள் உள்ளன. அவர்களை அரசியல் செய்ய வேண்டாம் என்பது ஜனநாயகத்திற்கு விரோதமானது. சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டால் அதை கட்டுப்படுத்த வேண்டியது அரசின் கடமை என்று கூறினார்.

மீண்டும் வாதத்தை முன்வைத்த தமிழ்நாடு அரசு தரப்பு, செப்டம்பர் 15ம் தேதிக்குள் பயிரை அறுவடை செய்து நிலத்தை ஒப்படைக்க வேண்டும். நிலத்தை பயன்பாட்டுக்கு எடுக்காவிட்டால் மின்சார உற்பத்தி பாதிக்கப்படும் என்று வாதிடப்பட்டது.

கால்வாய் தோண்டாவிட்டால் சுரங்கத்துக்குள் வெள்ளம் புகுந்து விடும்,  1.5 கிலோ மீட்டர் தூரத்தில் சேதப்படுத்தப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்க தயார் என என்.எல்.சி. தரப்பில் கூறப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி நிலத்தை கையகப்படுத்திய பின் சாகுபடி செய்ய அனுமதித்தது ஏன் என கேள்வி எழுப்பினார். மேலும் நிலத்துக்கு வேலி அமைக்காதது ஏன் எனவும் கேள்விகளை முன்வைத்தார்.

அதோடு அறுவடைக்குப் பின் நிலத்தை ஒப்படைப்பது தொடர்பாக மனுதாரரும் உத்தரவாதம் வழங்க வேண்டும் என நிதிபதி வலியுறுத்தினார்.

பின்னர் என்.எல்.சி.க்காக கையகப்படுத்திய நிலத்தில் சேதப்படுத்தப்பட்ட பயிர்களுக்கு விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து பிரமாண மனு தாக்கல் செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசு மற்றும் என்.எல்.சி.க்கு நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் தமிழ்நாடு அரசு மற்றும் என்.எல்.சியின் பிரமாண மனு அடிப்படையில் உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்

இதனை அடுத்து வழக்கை நாளை மறுநாளுக்கு ஒத்திவைத்து நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் உத்தரவிட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.