பக்ரீத் பண்டிகையின் போது பசுவை பலியிட்ட புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இஸ்லாமியர்கள் கொண்டாடும் பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் பண்டிகை கடந்த ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. அன்றை தினம் சிறப்பு தொழுகை நடத்தி, ஆடு, மாடுகளை பலியிட்டு பக்ரீத் பண்டிகையை கொண்டாடினர்.
இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரில் பக்ரீத் பண்டிகையின் போது, பசுமாட்டை பலியிடுவதை புகைப்படம் எடுத்து அதை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டவரை போலீசார் கைது செய்துள்ளனர். ஜம்மு-காஷ்மீரின் ஹஸ்யோட்டி கிராமத்தை சேர்ந்த இம்ரான் மீர் என்பவர் பக்ரீத் பண்டிகையின்போது, பசு மாட்டை பலியிட்டதை புகைப்படம் எடுத்துள்ளார். மேலும் அதனை தனது சமூக வலைத்தளபக்கங்களிலும் பதிவிட்டுள்ளார்.
இந்துக்களின் மத உணர்வுகளுக்கு மதிப்பளித்து பக்ரீத் பண்டிகையின்போது, பசுக்களை பலியிட வேண்டாம் என அஸ்ஸாமை சேர்ந்த ஒரு இஸ்லாமிய அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில், இம்ரான் மீர் வெளியிட்ட புகைப்படங்கள் கண்டனத்திற்கு உள்ளானது. மேலும் இந்த தகவல் காவல்துறையினருக்கும் சென்றது.
பின்னர் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மத உணர்வை காயப்படுத்தும் உள்நோக்கத்துடன் இம்ரான் மீர் புகைப்படங்களை பகிர்ந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்தனர். அவர் மீது சமூக வலைத்தளத்தை தவறாக பயன்படுத்தியது, இரு மதத்திற்கு இடையே மோதல் போக்கை தூண்டுவது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-இரா.நம்பிராஜன்








