Weather Update | வலுவடைந்தது காற்றழுத்த தாழ்வு பகுதி!

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து.

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, நேற்று (24-10-2025) காலை 05.30 மணியளவில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது, மேற்கு-வடமேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து, நாளை மறுநாள், தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாகவும் வலுவடையக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடமேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து அதே பகுதிகளில் நிலவுகிறது. இது, அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு-வட கிழக்கு திசையில் மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளை கடந்து நகரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுச்சேரியிலும் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது சென்னைக்கு கிழக்கு-தென்கிழக்கே 990 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் எனவும், நாளை மறுநாள் காலை மோந்தா புயலாக மாற வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.