நெல்லை மாவட்டம், நாங்குநேரி சுங்கச்சாவடியில் கட்டண உயர்வை எதிர்த்து லாரி உரிமையாளர் சங்கத்தினர் போராட்டம் நடத்த முயற்சி செய்தனர்.
நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளில் இன்று முதல் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
இதற்கு வாகன ஓட்டிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனை கண்டித்து
பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
மேலும், நெல்லை மாவட்டம் , நாங்குநேரி சுங்கச்சாவடியில் 4.8 சதவிகித கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. இதனால், நெல்லை மாவட்ட தமிழ்நாடு லாரி உரிமையாளர் சங்கத்தினர் நாங்குநேரி சுங்கச்சாவடியில் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தனர்.
ஆனால் , ஆர்ப்பாட்டத்துக்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை. இதையடுத்து ,
நாங்குநேரி டி.எஸ்.பி ராஜு தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.
மேலும், லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் நாங்குநேரி சுங்கச்சாவடிக்கு திரண்டு
வந்து, ஆர்ப்பாட்டம் நடத்த முயற்சி செய்தனர். போலீசார் போராட்டத்திற்கு அனுமதி
இல்லை என்று தெரிவித்ததையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.
—கு.பாலமுருகன்







