விமானத்தில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்த சங்கர் மிஸ்ரா இன்று காலை பெங்களூருவில் கைது செய்யப்பட்டார். இந்த அநாகரிக செயலால் சங்கர் மிஸ்ராவை அவர் பணி செய்த அமெரிக்க நிதி நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளது.
கடந்த நவம்பர் மாதம் 26-ம் தேதி அமெரிக்காவின் நியூயார்க் நகரிலிருந்து டெல்லிக்கு ஏர் இந்தியா விமானம் வந்தது. அந்த விமானத்தில் பிஸினஸ் வகுப்பில் பயணம் செய்த சங்கர் மிஸ்ரா என்ற பயணி சக பெண் பயணி மீது மது போதையில் சிறுநீர் கழித்தார். இதுதொடர்பாக ஏர் இந்தியா விமானப் பணிப்பெண்களிடம் அந்த பெண் புகார் தெரிவித்தார்.
விமானம் டெல்லியில் தரையிறங்கியதும், தவறு செய்த சங்கர் மிஸ்ரா மீது எந்த நடவடிக்கையையும் ஏர் இந்தியா நிர்வாகம் எடுக்கவில்லை. இதனால் கடும் அதிருப்தி அடைந்த அந்த பெண் ஏர் இந்தியா குழுமத்தை வழிநடத்தும் டாடா குழுமத்தின் தலைவருக்கு புகார் கடிதம் எழுதினார். இதனால் அதிர்ச்சியடைந்த டாட்டா குழுமம் அவரை 30 நாட்களுக்கு விமானத்தில் பயணிக்க தடை விதித்தது.
இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் வெளியாகி உலக அளவில் பேசு பொருளானது. மும்பையைச் சார்ந்த சங்கர் மிஸ்ரா அமெரிக்க நிதி நிறுவனமான ”வெல்ஸ் போர்கோ” எனும் நிறுவனத்தில் பணி செய்து வருகிறார். இந்த விவகாரம் பெரிதாக கவனம் ஈர்க்கப்பட்ட நிலையில் அவரை பணி நீக்கம் செய்வதாக வெல்ஸ் போர்கோ நேற்று அறிவித்தது.
பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்த நிலையில் சங்கர் மிஸ்ரா மீது காவல் நிலையத்தில் ஏர் இந்தியா நிறுவனம் சார்பிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு ஏர் இந்தியா நிறுவனத்திடம் மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் கடிதம் எழுதியிருந்தது.
இது குறித்து டெல்லி காவல்துறை வழக்கு பதிவு செய்த சம்பந்தப்பட்ட நபரை பிடிக்க தனிப்படை அமைத்தது. இந்நிலையில் இன்று காலை பெங்களூருவில் அவர் கைது செய்யப்பட்டதாகவும், அவரை விசாரணைக்கு டெல்லி அழைத்து செல்ல உள்ளதாகவும் டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.







