ஆதீனத்திற்கு மிரட்டல் விடுத்த விவகாரம் – கலைமகள் பள்ளி தாளாளரின் ஜாமீன் மனு தள்ளுபடி!

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்திற்கு மிரட்டல் விடுத்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில்,  கலைமகள் கல்வி நிறுவனத்தின் தாளாளர் கொடியரசின் ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. மயிலாடுதுறை மாவட்டம் அருகே 600…

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்திற்கு மிரட்டல் விடுத்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில்,  கலைமகள் கல்வி நிறுவனத்தின் தாளாளர் கொடியரசின் ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

மயிலாடுதுறை மாவட்டம் அருகே 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த தருமபுரம் ஆதீன சைவ மடம் அமைந்துள்ளது.  ஆதீனத்தின் 27வது தலைமை மடாதிபதியாக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் பட்டம் வகித்து வருகிறார்.

தஞ்சை மாவட்டம் ஆடுதுறை சார்ந்த வினோத் என்பவரும் மடாதிபதியின்
உதவியாளர் செந்தில் என்பவரும் தன்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டும்,  நேரில்
சந்தித்தும் ஆதீன மடாதிபதியின் ஆபாச வீடியோ,  ஆடியோ தங்களிடம் இருப்பதாகவும்
இதனை சமூக வலைதளங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் வெளியிடாமல் இருக்க
வேண்டுமென்றால் பணம் தர வேண்டும் என்று மிரட்டினார் என்று தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான திருக்கடையூர் தேவஸ்தானத்தின் கணக்காளராகவும்,  மடாதிபதியின் உதவியாளராகவும் இருக்கும் விருத்தகிரி புகார் அளித்தார்.

மடாதிபதியின் உதவியாளர் விருத்தகிரி அளித்த புகாரின் பேரில் மடாதிபதியின் உதவியாளர் செந்தில்,  பாஜக மயிலாடுதுறை மாவட்ட தலைவர் அகோரம்,  திமுகவின் செம்பனார்கோயில் மத்திய ஒன்றிய செயலாளர் அமிர்த விஜயகுமார் உள்ளிட்ட 9 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த சம்பவத்தில் செம்பனார்கோயிலைச் சேர்ந்த கலைமகள் கல்வி நிறுவனங்களின் தாளாளர் கொடியரசு,  பாஜக மயிலாடுதுறை மாவட்ட தலைவர் அகோரம்,  வழக்கறிஞர் செய்யூர் ஜெயச்சந்திரன் மற்றும் திமுக செம்பனார்கோயில் ஒன்றிய மத்திய செயலாளர் அமிர்த விஜயகுமார் ஆகியோர் தூண்டுதலாக இருந்துள்ளனர் என்று புகாரில் கூறப்பட்டது.

இதையடுத்து,  இந்த சம்பவம் தொடர்பாக சிறப்பு காவல் துறையினர் விசாரணை
மேற்கொண்டதில் சம்பவம் உண்மை என்று தெரிய வந்தது.  இதனைத் தொடர்ந்து தஞ்சை வடக்கு மாவட்டம்,  பாஜக மாவட்ட இளைஞரணி பொதுச் செயலாளர் வினோத் ,  மயிலாடுதுறை மாவட்ட பாஜக செயலாளர் விக்னேஷ்,  கலைமகள் பள்ளி தாளாளர் கொடியரசு,  உடந்தையாக செயல்பட்ட தஞ்சை வடக்கு மாவட்ட பாஜக முன்னாள் மாநில இளைஞர் அணி செயற்குழு உறுப்பினர் ஸ்ரீநிவாஸ் ஆகிய 4  பேரை போலீசார் கைது செய்தனர்.

இதனையடுத்து கலைமகள் கல்வி நிறுவனத்தின் தாளாளர் கொடியரசு,  ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.  அந்த மனுவில்,  சர்க்கரை நோய்,  இருதய பாதிப்பு உள்ளதாகவும்,  தொடர்ந்து சிறையில் இருந்தால் உடல் நிலை மேலும் பாதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில்,  இந்த மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது.  இதனையடுத்து,  கலைமகள் கல்வி நிறுவனத்தின் தாளாளர் கொடியரசின் ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.