ஆன்மிக சொற்பொழிவில் அவதூறாக பேசிய விவகாரம்! நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார் ஆர்.பி.வி.எஸ். மணியன்!

அவதூறு வழக்கில் கைது செய்யப்பட்ட ஆன்மிக சொற்பொழிவாளர் ஆர்.பி.வி.எஸ். மணியன் தனது பேச்சுக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளார். அண்மையில் சென்னையில் நடைபெற்ற ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சியில் அம்பேத்கர்,…

அவதூறு வழக்கில் கைது செய்யப்பட்ட ஆன்மிக சொற்பொழிவாளர் ஆர்.பி.வி.எஸ். மணியன் தனது பேச்சுக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளார்.

அண்மையில் சென்னையில் நடைபெற்ற ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சியில் அம்பேத்கர், திருவள்ளுவர், தமிழ் அறிஞர்கள் உள்ளிட்ட தலைவர்களை ஒருமையில் இழிவாகவும், அவதூறாகவும் ஆர்.பி.வி.எஸ். மணியன் பேசியிருந்தார். அவரது பேச்சு சமூக ஊடகங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரது பேச்சுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது எதிர்ப்பையும், கண்டனத்தை தெரிவித்திருந்தனர்.

அவரை கைது செய்ய வேண்டும் என்று பலரும் சமூக ஊடகங்களில் வலியுறுத்தி வந்தனர். இதனிடையே, ஆர்.பி.வி.எஸ். மணியனை சென்னை தியாகராயர் நகரில் உள்ள அவரது வீட்டில் வைத்து கடந்த வியாழக்கிழமை அதிகாலை சென்னை தெற்கு காவல் இணை ஆணையர் தலைமையிலான தனிப்படை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் ஆர்.பி.வி.எஸ். மணியன் தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி அல்லி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மணியன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மணியனின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். மேலும் தனது பேச்சுக்கு நிபந்தனையற்ற மன்னிப்புக்கோரி மணியன் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அதேசமயம் காவல்துறை தரப்பில் மணியனின் ஜாமீன் மனு மீது கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இருத்தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி அல்லி, ஜாமீன் கோரிய மணியனின் மனு மீது வரும் 25ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் எனத் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.