INDIA கூட்டணியை தீவிரவாத அமைப்புகளுடன் பிரதமர் மோடி ஒப்பிட்டிருந்த நிலையில், மணிப்பூரை நாங்கள் மீட்டெடுப்போம், நீங்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லி எங்களை அழையுங்கள் மிஸ்டர் மோடி, நாங்கள் இந்தியா என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி பதிலளித்துள்ளார்.
மணிப்பூரில் பழங்குடி சமூகத்தை சேர்ந்த இரண்டு பெண்களை கலவரக்காரர்கள் நிர்வாணமாக்கி ஊர்வலமாக இழுத்துச் சென்று கூட்டுப் பாலியல் கொடுமை செய்தது தொடர்பான காணொலி கடந்த சில நாட்களுக்கு முன் வெளியானது. இது நாடு முழுவதும் கடும் அதிரவலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரத்தில் மணிப்பூரை ஆளும் மாநில பாஜக அரசு மற்றும் மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் அழுத்தம் கொடுக்கத் தொடங்கினர். குறிப்பாக அரசியல் கட்சி தலைவர்கள், பெண் உரிமை செயல்பாட்டாளர்கள், கல்லூரி மாணவர்கள் என பல்வேறு தரப்பினர் தன்னெழுச்சியாக கண்டன ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள், மறியல் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியதால் அங்கும் முதல் நாள் (ஜூலை 20) முதல் மணிப்பூர் பிரச்னையை விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் 4-ஆவது நாளாக நாடாளுமன்றம் முடங்கியுள்ளது. மணிப்பூர் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும் என எதிர்கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். மணிப்பூரில் கலவரம் மூண்டு 3 மாதங்களாகியும் அதனை முடிவுக்கு கொண்டுவர பிரதமர் மோடி எந்த ஆக்கப்பூர்வ நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதே எதிர்கட்சியினரின் குற்றச்சாட்டு.
இந்த நிலையில் இன்று காலை பாஜக எம்பிக்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி, ஜே.பி.நட்டா மற்றும் பாஜக எம்பிக்கள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது..
”எதிர்க்கட்சிகள் திசை தெரியாமல் சென்று கொண்டிருக்கின்றனர். எதிர்கட்சிகள் கூட்டணி நெடுநாட்களுக்கு எதிர்கட்சியாகவே இருக்க வேண்டுமென தீர்மானித்து விட்டனர். அது தான் அவர்களின் தலையெழுத்தாகவும் உள்ளது.
அவர்கள் கூட்டணிக்கு “இந்தியா” என பெயர் வைத்துள்ளனர். ஆனால் தீவிரவாத அமைப்பான இந்தியன் முஜாகிதீன் என்ற பெயரிலும் , கிழக்கிந்தியா கம்பெனி என்ற பெயரிலும் “இந்தியா” உள்ளது. எனவே குறிக்கோளற்ற எதிர்கட்சிகளை பொருட்படுத்தவே தேவையில்லை. என்று பிரதமர் மோடி கூறியிருந்தார்.
ராகுல்காந்தி பதிலடி
INDIA கூட்டணியை தீவிரவாத அமைப்புகளுடன் பிரதமர் மோடி ஒப்பிட்டதற்கு பதில் அளிக்கும் விதமாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி ட்விட்டர் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
நீங்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லி எங்களை அழையுங்கள், மிஸ்டர் மோடி. நாங்கள் இந்தியா. மணிப்பூரை மிட்டெடுக்கவும், ஒவ்வொரு பெண் மற்றும் குழந்தையின் கண்ணீரை துடைக்கவும் நாங்கள் உதவுவோம். மணிப்பூர் மக்கள் அனைவரிடமும் அன்பையும் அமைதியையும் திரும்பக் கொண்டு வருவோம். மணிப்பூரில் இந்தியா என்ற எண்ணத்தை மீண்டும் உருவாக்குவோம். இவ்வாறு ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.







