“இடைக்கால பட்ஜெட் வியாபாரிகளை ஏமாற்றும் வகையில் உள்ளது” – விக்ரமராஜா விமர்சனம்!

இடைக்கால பட்ஜெட் வியாபாரிகளை ஏமாற்றும் விதமாக உள்ளதாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்ரமராஜா தெரிவித்துள்ளார். தமிழ்மொழி காப்போம்,  தமிழ் மொழி வளர்ப்போம் என்பதை மையப்படுத்தி அனைத்து கடைகளிலும் பெயர் பலகை தமிழில்…

இடைக்கால பட்ஜெட் வியாபாரிகளை ஏமாற்றும் விதமாக உள்ளதாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்ரமராஜா தெரிவித்துள்ளார்.

தமிழ்மொழி காப்போம்,  தமிழ் மொழி வளர்ப்போம் என்பதை மையப்படுத்தி அனைத்து
கடைகளிலும் பெயர் பலகை தமிழில் வைக்க வேண்டும் என வணிகர்கள் மத்தியில்
விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு
சார்பில், ஈரோடு கருங்கல்பாளையத்தில், இரு சக்கர பேரணி இன்று நடைபெற்றது.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்ரமராஜா தலைமையில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணியை,  தமிழ்நாட்டு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி கொடியசைத்து துவக்கி வைத்தார்.  இந்த பேரணியானது, கருங்கல்பாளையம், காவிரி ரோடு, பன்னீர்செல்வம்பார்க், மணிகூண்டு வழியாக மீண்டும் கருங்கல்பாளையத்திலேயே நிறைவடைந்தது.

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்ரமராஜா,

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கடைகளிலும் பெயர் பலகைகளை தமிழாக்கம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஈரோடு மாவட்டத்தில் தொடங்கியுள்ளோம்.  பெயர் பலகைகளை தமிழாக்கம் செய்தால் ஜிஎஸ்டி கணக்கில் சிக்கல் வராது என தமிழ்நாடு அரசு வியாபாரிகளுக்கு உறுதி அளித்துள்ளது.
மேலும் முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரை,  அரசு அதிகாரிகள் தமிழில் தான் கையெழுத்து போட வேண்டும் எனக்கூறி இயற்றிய சட்டத்தை தற்போதைய தமிழ்நாட்டின் அதிகாரிகள் கடைப்பிடிப்பதில்லை.

உள்நாட்டு வணிகர்கள் அதிக அளவில் தமிழில் பெயர் பலகைகள் வைத்துள்ள நிலையில்,
ஆங்கிலத்தில் பெயர் வைத்துள்ள கார்ப்பரேட் நிறுவனங்கள் தமிழில் பெயர்ப்பலகை  வைக்க தமிழ்நாடு அரசு நோட்டீஸ் வழங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும்.  வரும் 7ஆம் தேதி சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர் சாமிநாதன் தலைமையில்
அதிகாரிகளுடன் நடைபெறும் கூட்டத்திற்கு பிறகு, பெயர் பலகை வைப்பதற்கான
காலக்கெடு நிர்ணயம் செய்யப்படும்.

10 லட்சம் ரூபாய் வரை வருமான வரி விலக்கு,  ஜிஎஸ்டி வரி விதிப்பில் மாற்றம்
கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்த போதும், இடைக்கால பட்ஜெட்டில் இது தொடர்பாக எந்தவித அறிவிப்பும் இல்லை.  இந்த இடைக்கால பட்ஜெட் வியாபாரிகளை ஏமாற்றும் பட்ஜெட்டாக உள்ளது. 300யூனிட் சோலார்
மின்சாரம், 1 லட்சம் ரூபாய் வட்டியில்லா கடன் கொடுப்பது என இரண்டு நிதிநிலை
அறிக்கையை வரவேற்பதாக தெரிவித்தார்.  அதே நேரத்தில் மழை, வெள்ளம் பாதிப்பு காரணமாக வாழ்வதாராம் பாதிப்பு ஏற்பட்ட வியாபாரிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்க வேண்டும்.

கடைகளுக்கு பாதிப்பு ஏற்படும் நேரத்தில் காப்பீடு நிறுவனங்கள்,  காப்பீடு தருவதற்கு மாற்று காரணத்தை கூறி இழப்பீடு தர மறுக்கிறது.  இது போன்ற தனியார் காப்பீடு நிறுவனங்கள் முகத்திரையை கிழித்து எறிய தமிழ்நாடு வணிக சங்கத்தின் சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு விக்கிரமராஜா தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.