ஒடுக்கப்பட்டவர்களின் ஒப்பற்ற குரல்… சமூகநீதிப் போராளி இரட்டைமலை சீனிவாசன்…

ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்து, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்து ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக கடைசி வரை போராடிய இரட்டைமலை சீனிவாசன் நினைவு நாள் இன்று… இளமைக்காலம்:  செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே கோழியாளம் என்னும்…

ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்து, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்து ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக கடைசி வரை போராடிய இரட்டைமலை சீனிவாசன் நினைவு நாள் இன்று…

இளமைக்காலம்: 

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே கோழியாளம் என்னும் சிற்றூரில் 1857ம் ஆண்டு பிறந்தவர் இரட்டைமலை சீனிவாசன். கோழியாளத்தில் உள்ள பள்ளியில்
படிப்பை தொடங்கிய சீனிவாசன், தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்ததால், சாதிய கொடுமையினாலும், குடும்ப வறுமையின் காரணமாகவும் குடும்பத்தினரோடு தஞ்சைக்கு குடிபெயர்ந்தார். அங்கும் சாதிய கொடுமை தலைவிரித்து ஆடியதால் தஞ்சையிலிருந்து கோவைக்கு சென்றார்.

கோவையில் கல்லூரி படிப்பை தொடங்கிய போது, 400 மாணவர்களில் 10 மாணவர்களை தவிர அனைவருமே முற்பட்ட சாதி மாணவர்களாக இருந்தனர். அங்கும் தீண்டாமைக் கொடுமை தொடர்ந்த போதிலும், பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் கல்லூரி படிப்பை முடித்தார். எப்படியாவது இந்த தீண்டாமை கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என எண்ணினார். நீலகிரியில் உள்ள ஒரு நிறுவனத்தில் எழுத்தாளராக பணியாற்றிய போது, 1887 ம் ஆண்டு ரெங்கநாயகி அம்மாளை திருமணம் செய்து கொண்டார். 10 ஆண்டுகள் அங்கு பணியாற்றிய பின் 1890 ம் ஆண்டு சென்னை வந்தார்

பறையர் மாத இதழ்:

எப்படி ஒடுக்கப்பட்டோமோ அப்பெயராலே சுதந்திரம் பாராட்ட வேண்டும் என எண்ணிய இரட்டைமலை சீனிவாசன், 1891ம் ஆண்டு பறையர் மகாசன சபையை தோற்றுவித்தார்.
பின்னர் அது பறையன் என்ற மாத இதழாகவும், அதன் பிறகு வார இதழாகவும் 1900 வரை வெளியானது.

சட்டமன்ற உறுப்பினராக இரட்டைமலை சீனிவாசன்: 

இரட்டைமலை சீனிவாசன் 1923 முதல் 1939 வரை சட்டப்பேரவையில் முக்கிய உறுப்பினராக பணியாற்றினார். அப்போது சட்ட சபையில் சில முக்கிய
தீர்மானங்களை முன்மொழிந்தார். பள்ளர், பறையன் என அழைப்பதை ஆதிதிராவிடர் என மாற்ற தீர்மானம் கொண்டு வந்தார். ஆதி திராவிட மக்களின் வாழ்வியலுக்காக ஒயாது குரல் கொடுத்து வந்தார்.

தீர்மானம் கொண்டு வந்த பிறகும் பல பத்திரப்பதிவு அலுவலகங்களில் பஞ்சமன் என்றே பதிவு செய்யப்பட்டிருந்தது. அதனை அரசு உடனே தடுத்த நிறுத்த வேண்டும் என
சட்ட பேரவையில் முறையிட்டார். அப்போது இருந்த முதலமைச்சர் பனகல் அரசர் அதற்கான நடவடிக்கையும் எடுத்தார். அதன் பின்னரே ஆதி திராவிடர் என முழுமையாக மாற்றம் கொண்டு வரப்பட்டது.

ஆண்டுதோறும் பட்ஜெட் கூட்டத்தொடரில் இரட்டை மலை சீனிவாசன் உரையாற்றுவது வழக்கம். பட்ஜெட் கூட்டத்தொடரில் ஆதிதிராவிட மக்களுக்கு தேவையான
நிதி ஒதுக்கீடு, கல்வி வளர்சி, சுகாதாரா வளர்ச்சி , நில ஒதுக்கீடு என அம்மக்களின் உரிமைகள் அனைத்தும் கிடைக்க குரல் கொடுத்தார்.

ஆதி திராவிடர்களுக்கு தனி தொகுதி வேண்டும் எனவும், 21 வயது நிரம்பிய அனைவருக்கும் வாக்குரிமை கட்டாயம் வழங்கப்பட வேண்டும் எனவும் சட்டமன்றத்தில் தீர்மானங்களை கொண்டு வந்து, அது நிறைவேற காரணமாக இருந்தவர்.

அம்பேத்கரும் இரட்டை மலை சீனிவாசனும்…

1930 – 32ல் லண்டனில் நடைபெற்ற வட்ட மேசை மாநாட்டில், ஒடுக்கப்பட்டோரின் பிரதிநிதியாக அம்பேத்கருடன், இரட்டைமலை சீனிவாசன் கலந்து கொண்டார்.
வட்ட மேசை மாநாடுகளில் இருவரும் இணைந்து ஒடுக்கப்பட்டோருக்காக குரல் கொடுத்தனர். இரட்டைமலை சீனிவாசனுக்கும் அம்பேத்கருக்கும் சில ஒற்றுமைகள் இருக்கிறது. இருவரும் கல்வியால் மேலெழுந்தவர்கள்.

கம்பீரமான கோட் சூட்டுடன், தன்னை விட தன் மக்களின் முன்னேற்றத்திற்காக உழைத்தவர்கள். தமிழகத்திலேயே முதல் பட்டியலின பட்டதாரி என்ற பெருமை இரட்டைமலை சீனிவாசனையும், வெளிநாட்டு பல்கலைகழகத்தில் டாக்டர் பட்டம் பெற்ற முதல் பட்டியலினத்தவர் என்ற பெருமை அம்பேத்கரையே சாரும். இருவரும் பத்திரிக்கையை பயன்படுத்தி பட்டியலினத்தவர்களின் பிரச்னையை வெளியுலக்குக்கு கொண்டு வந்தவர். இரட்டைமலை சீனிவாசன் பறையன் இதழை நடத்தியது போலவே, அம்பேத்கர் பகிஷ்கருக் பாரத் இதழை நடத்தினார்.

இறப்பு:

இந்தியாவில் தலித் இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவராக இருந்து வந்த இரட்டமலை சீனிவாசன், செப்டம்பர் மாதம் 18ஆம் தேதி, 1945 ஆம் ஆண்டில், பெரியமேடு என்னும் இடத்தில் தனது இறுதி மூச்சை விட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.