“The Hunt For Veerappan” வெளியானது வீரப்பனின் ஆவணத்தொடர்!

வீரப்பனின் வாழ்கை வரலாறு குறித்து நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் உருவாக்கியுள்ள “தி ஹண்ட் ஃபார் வீரப்பன்” ஆவணத்தொடர் ஓடிடி தளத்தில் வெளியானது. தமிழ்நாடு அதிரடிப்படையால் வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்டு 19 ஆண்டுகள் கடந்துவிட்டன. 2004 அக்டோபர்…

வீரப்பனின் வாழ்கை வரலாறு குறித்து நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் உருவாக்கியுள்ள “தி ஹண்ட் ஃபார் வீரப்பன்” ஆவணத்தொடர் ஓடிடி தளத்தில் வெளியானது.

தமிழ்நாடு அதிரடிப்படையால் வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்டு 19 ஆண்டுகள் கடந்துவிட்டன. 2004 அக்டோபர் 18ம் தேதி தமிழ்நாடு அதிரடிப்படையினரின் வாழ்வில் மறக்க முடியாத நாளாக அமைந்தது. தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே `ஆபரேஷன் கக்கூன்’ என்ற பெயரில் தமிழ்நாடு அதிரடிப்படைத் தலைவராக இருந்த விஜய்குமார் ஐ.பி.எஸ், வீரப்பனை சுட்டு கொன்றார்.

வீரப்பனின் இறுதி நிமிடங்கள் குறித்து பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் வெளிவந்தாலும், அதுகுறித்து அதிரடிப்படை தரப்பிலோ அந்தக் காலகட்டத்தில் வீரப்பன் தேடுதல் வேட்டைக்காக சென்றவர்களிடம் இருந்தோ எந்தப் பதிலும் வெளிவரவில்லை. இந்த நிகழ்வு அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதாவின் சாதனையாக பார்க்கப்பட்டது.

சந்தன மரம் கடத்தல், யானை தந்தம் கடத்தல், ஆள் கடத்தல் எனப் பல்வேறு முகங்களைக் கொண்ட வீரப்பன், 108 நாட்கள் `கன்னட சூப்பர் ஸ்டார்’ ராஜ்குமாரை சிறை வைத்ததை மிகப் பெரிய கடத்தலாக கருதப்பட்டது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா என மூன்று மாநில வனத்துறைக்கும்  சவாலாக திகழ்ந்த வீரப்பன் மீது கேரளாவில் ஒரே ஒரு குற்ற வழக்கு மட்டுமே பதிவாகியுள்ளது.

வீரப்பன் மீது பதிவாகியுள்ள 184 வழக்குகளில் 99 வழக்குகள் தமிழ்நாட்டிலும், 84 வழக்குகள் கர்நாடகாவிலும் ஒரே ஒரு வழக்கு கேரளாவிலும் பதிவாகியுள்ளது. கர்நாடகாவில் பதிவான வழக்குகளில் 15 வழக்குகள் கொலைகள் தொடர்புடையவை. மற்றவை ஆள் கடத்தல், ஆயுதக் கடத்தல் ஆகியவற்றுடன் தொடர்புடையவை. இதில் முக்கியமான வழக்குகள் என்றால் தமிழ்நாடு டி.எஸ்.பி சிதம்பரநாதன் கடத்தல், கர்நாடக அமைச்சர் நாகப்பா கடத்தல், நடிகர் ராஜ்குமார் கடத்தல் ஆகியவையாகும்.

தமிழ்நாட்டின் ஒகேனக்கல், பாலக்கோடு முதல் கர்நாடகாவின் குடகு மலை வரையிலும் கேரள மாநிலம் வரையில் சுமார் 200 கிலோமீட்டருக்கு மேல், வீரப்பனைப் போல காடுகளை அளந்து நடந்தவர் யாருமில்லை’ என வனத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். காடுகளில் வாழும் மக்களின் பழக்கவழக்கம், விலங்குகள், பறவைகள், நீர்வழிப் பாதைகள் என அனைத்தையும் துல்லியமாக அறிந்தவராகவும் பார்க்கப்பட்டார்.

இந்நிலையில், நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி நிறுவனம் வீரப்பன் வாழ்கை வரலாறு குறித்து “தி ஹண்ட் ஃபார் வீரப்பன்” என்னும் பெயரில் ஆவணத்தொடர் ஒன்றை தயாரித்துள்ளது. வீரப்பன்  குறித்து இதற்கு முன் வெளியான திரைப்படங்களிலும், தொடர்களிலும் முழுமையான மற்றும் சரியான தகவல்கள் ஏதும் வெளிவரவில்லை என மூத்த பத்திரிக்கையாளர்களும், மலைவாழ் மக்களும், கருத்து தெரிவிக்கின்றனர்.

வீரப்பனின் வரலாறு குறித்து ஏராளமான தொடர்களும், திரைப்படங்கள் வெளிவந்தாலும்  புத்தங்கங்களின் வழியே அவரை குறிப்பிட்டது போல விவரமான தகவல்கள் வெளிக்கொணரப்படவில்லை.

https://twitter.com/NetflixIndia/status/1687363252018421760

அண்மையில் இந்த தொடரின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. அதில், “அவன் மனித தோல் போத்திய மிருகம்..” என்பது போன்ற வசனங்கள் இடம் பெற்றுள்ளன. அப்போதைய காவல் அதிகாரிகள் வீரப்பனை பிடிக்க தேடுதல் வேட்டையில் இறங்குவது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கியுள்ள இந்தத் ஆவணப்படத் தொடர் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.