ஈரோட்டில் திருமணம் முடிந்து இளைஞர் ஒருவர் திருமண கோலத்தில் தனது மனைவியை மாட்டு வண்டியில் ஏற்றி ஊர்வலமாக சென்ற நிகழ்வு அப்பகுதி மக்களை பெரிதும் கவர்ந்துள்ளது.
திருமணம் என்றாலே மணமக்கள் பென்ஸ், ஜாக்குவார் போன்ற உயர்ரக கார்களிலும், பல்லக்கு சாரட் வண்டி போன்றவற்றில் அழைத்துச் செல்லப்படுவது வழக்கமாக உள்ளது. ஆனால் இங்கு ஒரு புதுமண தம்பதியோ வித்தியாசமான அனுபவத்தை பெற வேண்டும் ஏற்பதற்காக திருமணமான கையோடு, மாட்டுவண்டியில் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
ஈரோடு மாவட்டம், திண்டல் சக்திநகரை சேர்ந்தவர் நிசாந்த் பாலாஜி. மருத்துவரான இவர், வெட்டுக்காட்டு வலசை என்ற பகுதியைச் சேர்ந்த பேஷன் டிசைனர் ரித்து என்பவரை திருமணம் செய்ய பெரியோர்களால் நிச்சயம் செய்யப்பட்டு, இவர்களுக்கு பழமை மாறாமல் பாரம்பரிய முறைப்படி திருமணம் மேட்டுக்கடையில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று திருமணம் நடைபெற்றது.
திருமணம் முடிந்த கையோடு, புதுமண பெண் ரித்துவை, புது மாப்பிள்ளையான நிசாந்த் பாலாஜி, தனது வீட்டிற்கு மாட்டு வண்டியில் அழைத்துச்செல்ல முடிவு செய்தார். அதன்படி மாட்டு வண்டி தயார் செய்யப்பட்டது. அலங்கரிக்கப்பட்ட அந்த வண்டியில் மாடுகள் பூட்டப்பட்டு, தனது புதுமனைவி ரித்துவை, நிசாந்த் பாலாஜி வண்டியில் ஏற்றினார். பின்னர் மாட்டுவண்டியில் திருமண கோலத்தில் சென்ற புதுமண தம்பதிகளை பார்த்தவர்கள் ஆச்சரியத்தில் மூழ்கினர்.
மேலும் மணமகன் பிரவீனை அப்பகுதி மக்கள் வெகுவாகப் பாராட்டினர். திருமண நாளில் மாட்டு வண்டி பயணம் மேற்கொண்டது வித்தியாசமாகவும், புதுவித அனுபவமாகவும் இருந்ததாக புதுமண தம்பதியினர் மகிழ்ச்சி தெரிவித்தனர். வாடகைக்கு கார் எடுத்து ஊர்வலம் சென்று பந்தா காட்டி திருமணம் செய்யும் பலருக்கு மத்தியில் பாரம்பரியம் மறக்காமல் திருமணம் முடிந்தவுடன் மாட்டுவண்டியில் பயணம் செய்த இந்த நிகழ்வு பலராலும் பாராட்டப்பட்டது.
- பி.ஜேம்ஸ் லிசா








