சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில், தாய், தந்தையை பறிகொடுத்து நிற்கதியாய் நிற்கும் 12 வயது சிறுமியின் நிலை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூரை அடுத்த, நடுசூரங்குடி கிராமத்தை சேர்ந்த பாக்கியராஜ் – செல்வி தம்பதி, சிவகாசி, சாத்தூர் சுற்றுவட்டார பகுதியில், பலரின் பசியை ஆற்றும் பட்டாசுத் ஆலையே, இவர்களின் வாழ்க்கையை நகர்த்த உதவியாக இருந்தது. வழக்கம் போல வேலைக்குச் சென்று வருவதாக, தங்களின் 12 வயது மகள் நந்தினியிடம் சொல்லிவிட்டு, தாயும், தந்தையும் வேலைக்குச் சென்றனர். ஆனால், சென்றவர்கள் மீண்டும் வரவில்லை, செய்தி தான் வந்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஆம்… பட்டாசு ஆலை வெடி விபத்தில், தந்தை பாக்கியராஜ் உயிரிழந்துவிட்டதையும், தாய் செல்வி பலத்த தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதாகவும், அவர்களின் குழந்தை நந்தினிக்கு தகவல் சொல்லப்பட்டது. பக்குவப்பட்டவர்களையே பதற வைக்கும் இந்த செய்தியைக் கேட்ட, சிறுமி நந்தினியின் துடிதுடிப்பும், கதறலும் வார்த்தைகளில் விவரிக்க முடியாதது.
அரசுப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கும் சிறுமி நந்தினி, ஒரே நேரத்தில், தாயோடு, தந்தையையும் இழந்து, இனி என்ன செய்யப் போகிறோம் என தெரியாமல் நிற்கதியாய் நின்று கொண்டிருக்கிறார். பட்டாசு ஆலைக்கு வேலைக்குச் செல்ல வேண்டாம், என பலர் தடுத்தும், குடும்பத்தின் நிலை மற்றும் மகளின் எதிர்காலத்துக்காக, நந்தினியின் பெற்றோர் வேலைக்குச் சென்றதாக உறவினர்கள் கண்ணீர் மல்க கூறுகின்றனர். தாங்க முடியாத சோகத்தையும், பெரும் இழப்பையும் சந்தித்துள்ள சிறுமி நந்தினியின் எதிர்காலம், எவ்வாறு நகரப் போகிறது?, என்பது பலரையும் கவலையடையச் செய்துள்ளது. சிறுமி நந்தினிக்கு தேவையான கல்வி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய, தமிழக அரசு உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்பதே, அனைவருடைய கோரிக்கையாக உள்ளது.