டெல்லியில் ஜி20 மாநாடு கோலாகலமாக தொடங்கியது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ளவிருக்கும் பல்வேறு நாட்டுத்தலைவர்களை பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார்.
உலகமே எதிர்பார்த்து காத்திருந்த ஜி-20 மாநாடு டெல்லியில் கோலாகலமாக தொடங்கியது. இன்று மற்றும் நாளை ஆகிய இரு தினங்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் உள்ளிட்ட உலக தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். இதற்காக டெல்லியில் 1.30 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மாநாட்டில் கலந்து கொள்ள இருக்கும் தலைவர்களை, பிரதமர் நரேந்திர மோடி டெல்லி பிரகதி அரங்கில் ஒடிசா கோனார்க் சக்கரம் அமைக்கப்பட்டுள்ள பகுதியில் வரவேற்றார். இந்த கோனார்க் சக்கரம் 13 ஆம் நூற்றாண்டில் மன்னர் முதலாம் நரசிம்மதேவாவின் ஆட்சியில் கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, ஜி20 உச்சி மாநாடு நடைபெறும் டெல்லி பிரகதி அரங்கத்தில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் ஏற்பாடுகளை பிரதமர் மோடி இன்று காலை நேரில் ஆய்வு செய்தார். பிறகு, பாரத் மண்டபம் பகுதியிலும் பிரதமர் மோடி ஆய்வு மேற்கொண்டார். பிரதமருடன் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் உடன் இருந்தார்.
இந்த ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் பல்வேறு நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி இருதரப்பு பேச்சுவாா்த்தைகள் நடத்தவுள்ளார். இன்று இரவில் குடியரசுத் தலைவர் சார்பில் விருந்து நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. தொடர்ந்து நாளை ராஜ்காட்டில் மகாத்மா காந்திக்கு தலைவர்கள் மரியாதை செலுத்தவுள்ளனர்.
அதே நாளில், நிலையான-சமத்துவம் கொண்ட ‘ஒரே எதிா்காலம்’, ஒற்றுமை நிறைந்த ‘ஒரே குடும்பம்’, ஆரோக்கியமான ‘ஒரே பூமி’க்கான கூட்டுப் பார்வையை தலைவர்கள் பகிர்ந்து கொள்வார்கள் என்று பிரதமர் மோடி கூறியிருந்தார்.







