சதுரகிரி மலையில் பற்றி எரிந்த காட்டு தீ 3 நாள்களுக்கு பிறகு கட்டுக்குள் வந்தது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில்.இந்த கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு மாதந்தோறும் பிரதோஷம், அமாவாசை பௌர்ணமி நாட்கள் மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது.
சுந்தர மகாலிங்கம் கோயில் மலைப்பகுதியை சுற்றி கடந்த 17 ஆம் தேதி காட்டு தீ
வேகமாக பரவியது. இதனால் ஏற்கனவே பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்ய
அனுமதிக்கப்பட்ட நாட்களில் கடைசி நாளான 18 ஆம் தேதி பக்தர்கள் மலையேற
அனுமதிக்கப்படவில்லை.
மேலும் 17ஆம் தேதி ஆடி பிறப்பு அமாவாசையை முன்னிட்டு
மலையேறிய பக்தர்கள் அன்று இரவு மலையை விட்டு கீழே இறங்கவும் அனுமதிக்கப்படாமல் கோயில் பகுதியில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் தீ ஓரளவிற்கு கட்டுக்குள் வந்த பின்பு மறுநாள் பக்தர்கள் கீழே இறங்க அனுமதிக்கப்பட்டனர். இதில் பக்தர்கள் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.
இந்நிலையில் வனப்பகுதியில் வீசி வரும் பலத்த காற்று காரணமாக கடந்த 3 நாட்களாக
கொழுந்து விட்டு எரிந்த தீ முழுவதும் கட்டுக்குள் வந்துள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் கடந்த 3 நாட்களாக பரவிய காட்டுத் தீயால் வனப்பகுதியில் ஏராளமான மூலிகை செடிகள் மற்றும் மரங்கள் தீக்கரையாயின. கடந்த மூன்று நாட்களாக இரவு பகல் பாராமல் 30 ற்கும் மேற்பட்ட வனத்துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
சதுரகிரி கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்களைக்
கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் மலைப்பகுதியில் தீ வைக்கும் மர்ம நபர்கள் மீது வன உயிரின பாதுகாப்பு தடுப்புச் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சாப்டூர் வன
அலுவலர் செல்லமணி எச்சரிக்கை எடுத்துள்ளார்.
கடந்த மூன்று மாதங்களாக சதுரகிரி கோயில் அடிவாரப் பகுதியில் சோதனை என்பது
நடைபெறவில்லை என குற்றம் சாட்டும் சமூக ஆர்வலர்கள், சதுரகிரி கோவிலுக்கு செல்லும் பக்தர்களிடம் வனத்துறையினர் சோதனையை தீவிரப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.







