திருக்குறுங்குடி திருமலை நம்பி கோயிலுக்குச் செல்ல வனத்துறையினர் அனுமதி வழங்கியுள்ளனர்.
நெல்லை மாவட்டம், களக்காடு புலிகள் காப்பகத்திற்குள்பட்ட திருக்குறுங்குடி மேற்கு தொடர்ச்சி மலையில் ஸ்ரீ திருமலைநம்பி கோயில் அமைந்துள்ளது. 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக திகழும் இந்த கோயில் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட சிறப்பு வாய்ந்தது.
ஏழைகளின் திருப்பதி என்றழைக்கப்படும் திருமலைநம்பி கோயில் திருக்குறுங்குடியில் இருந்து 8 கி.மீ தொலைவில் அடர்ந்த வனப்பகுதியில் உள்ளது. வனத்துறை சோதனை சாவடியில் இருந்து கோயிலுக்கு செல்ல சாலை வசதி இல்லாததால் 4 கி.மீ.தூரம் பக்தர்கள் நடந்து சென்று வருகின்றனர். பிரசித்திப் பெற்ற இந்த கோயிலில் வாரம் தோறும் சனிக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவது வழக்கம்.
கொரோனா பரவல் காரணமாக, திருமலைநம்பி கோயிலுக்கு செல்ல வனத்துறையினர் தடை விதித்தனர். இதனை தொடர்ந்து ஆவணி மாதம் நடைபெறும் உறியடி திருவிழா, புரட்டாசி கருட சேவை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டது. மூடப்பட்டுள்ள திருமலைநம்பி கோயிலை கொரோனா வழிபாட்டு நெறிமுறைகளுடன் மீண்டும் திறக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதனிடையே தமிழக அரசு வாரத்தின் அனைத்து நாட்களிலும் வழிபாட்டு தலங்களை திறக்க உத்தரவிட்டுள்ளது. இதனால் திருமலைநம்பி கோயிலுக்கு செல்ல வனத்துறையினர் அனுமதி வழங்கியுள்ளனர். புரட்டாசி மாதத்தின் கடைசி சனிக்கிழமையான நாளை திருமலைநம்பி கோயிலுக்கு செல்ல கொரோனா வழிபாட்டு நெறிமுறைகளுடன் அனுமதி வழங்கப்படும் என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.








