திருநெல்வேலி மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய குழுவினா் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.
வங்கக்கடலில் ஏற்பட்ட கீழடுக்கு சுழற்சி காரணமாக திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 17, 18 ஆம் தேதிகளில் கனமழை பெய்தது. தாமிரவருணியில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது. திருநெல்வேலி மாநகரின் பல்வேறு பகுதிகளையும் மழைநீா் சூழ்ந்தது. செவ்வாய், புதன்கிழமைகளில் மாநகராட்சியினரும், மீட்புக்குழுவினறும் வாருகால்ளை சரி செய்ததால் பல இடங்களில் மழைநீா் வழிந்தோடியது. இருப்பினும் சில இடங்களில் 4 ஆவது நாளாக வியாழக்கிழமையும் மழைநீா் வழிந்தோடாமல் தேங்கி நின்றது.
இந்நிலையில், தேசிய பேரிடர் மேலாண்மை ஆலோசகர் கே.பி.சிங் தலைமையிலான மத்திய ஆய்வுக் குழுவினர், வெள்ளம் பாதித்த தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஆய்வு செய்தனர். தொடர்ந்து இக்குழுவினர் நேற்று காலை, நெல்லைமாவட்டத்தில் ஆய்வை தொடங்கினர்.
முன்னதாக, திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் வெள்ள பாதிப்பு வீடியோ காட்சிகளை அவர்கள் பார்வையிட்டனர்.
தொடர்ந்து, வெள்ளம் பாதித்த மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ஊரக வளர்ச்சி துறை அலுவலகம், பாளையங்கோட்டை வட்டாட்சியர் அலுவலகம் ஆகியவற்றில் மழையில் நனைந்த கோப்புகள் மற்றும்தளவாடப் பொருட்களை பார்வையிட்டனர். தாமிரபரணி ஆறு, அதன் நீர்வரத்து, வெள்ளம் சூழ்ந்த திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையம், டவுண் காட்சி மண்டபம் ஆகியவற்றைப் பார்வையிட்டு, பொதுமக்களிடம் பாதிப்புகளைக் கேட்டறிந்தனர்.







