தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுகம் எப்போது? வெளியான புதிய தகவல்!

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அடுத்த வாரம் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்குவார் என நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், பிப்.2-ம் தேதி ‘தமிழக வெற்றி…

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அடுத்த வாரம் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்குவார் என நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், பிப்.2-ம் தேதி ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற புதிய கட்சியை தொடங்கினார். அந்த கட்சியின் தலைவராக நடிகர் விஜய் அறிவிக்கப்பட்டு அதன் பிறகு தனது கட்சியின் கொள்கை மற்றும் தேர்தலில் நேரடியாக களமிறங்குவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை 3பக்க அறிக்கையாக வெளியிட்டார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்,  “என்னைப் பொறுத்தவரையில் அரசியல் மற்றொரு தொழில் அல்ல.  அது ஒரு புனிதமான மக்கள் பணி. அரசியலின் உயரம் மட்டுமல்ல,  அதன் நீள அகலத்தையும் அறிந்துகொள்ள எம்முன்னோர் பலரிடமிருந்து பாடங்களைப் படித்துத் தயார்ப்படுத்தி மனதளவில் பக்குவப்படுத்திக் கொண்டு வருகிறேன்.  தேர்தல் ஆணையத்தின் ஒப்புதல் கிடைத்ததும், கட்சியின் சின்னம், கொடி ஆகியவைற்றை வெளியிடுவோம். ஒப்புக்கொண்ட படங்களை முடித்துக்கொடுத்துவிட்டு முழுமையாக அரசியலில் ஈடுபடுவேன்” என அறிக்கையில் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து மாவட்ட செயலாளர்கள் அறிவிப்பு, மகளிர் அணி அறிவிப்பு மற்றும் மகளிர் அணிக்காக மாநில அளவில் தனி அலுவலகம் என அடுத்தடுத்த நடவடிக்கைகளில் விஜய் இறங்கினார். இதன் பின்னர் மொபைல் செயலி அறிமுகப்படுத்தப்பட்டு அதன் வாயிலாக உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது. இந்த செயலி அறிமுகமான இரண்டே நாட்களில் அதன் வழியாக 50லட்சம் உறுப்பினர்கள் தங்களை தவெக வில் இணைத்துக் கொண்டனர்.

இதன் பின்னர் கட்சிக் கொடி குறித்த அறிவிப்பு வெளியாகும் என மார்ச் மாதமே தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சிக் கொடி குறித்த அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. சிவப்பு, மஞ்சள், வெள்ளை உள்ளிட்ட நிறங்கள் கொடியில் இடம் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து பிரம்மாண்டமான மாநில மாநாட்டை திருச்சி மற்றும் மதுரையில் நடத்த தவெக திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.