அண்ணாமலையார் கோயிலில் கோலாகலமாக நடைபெற்ற கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றம்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை மகா தீபம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை மகா தீபத்திருவிழா இன்று தொடங்கி நவம்பர் 24 வரை தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெறுகிறது. தொடர்ந்து வரும் 24ம் தேதி மகா தீபம் ஏற்றப்பட உள்ளது. பஞ்ச பூத தலங்களில் அக்னி தலமாக அமைந்துள்ள இக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் கார்த்திகை தீபத்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. பிரம்மாவுக்கும், திருமாலுக்கும் அடிமுடி காணாத ஜோதிப்பிழம்பாக சிவபெருமான் எழுந்தருளியதை கொண்டாடும் வகையில், கார்த்திகை மாதம் கிருத்திகை தினத்தன்று, திருவண்ணாமலை மலை மீது மகாதீபம் ஏற்றப்படுகிறது.

இதையடுத்து நவம்பர் 23 இரவு முதல் நவம்பர் 24 இரவு வரை பௌர்ணமி மற்றும் தீபத்தையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் மலையை சுற்றி கிரிவலம் செல்வார்கள். அதையடுத்து நவம்பர் 24, அதிகாலை 4 மணிக்கு கோவிலுக்குள் பரணி தீபம் ஏற்றப்படுகிறது.

அதைத்தொடர்ந்து நவம்பர் 24, மாலை 6 மணிக்கு அண்ணாமலை மலையின் உச்சத்தில் நெய் மற்றும் மூலிகை தைலம் நிரப்பிய கொப்பரையில் தீபம் ஏற்றப்பட உள்ளது. மேலும் பக்தர்களின் வசதிக்காக நெய் காணிக்கை தொகையை ரொக்கமாக செலுத்தவும், நேரடியாக நெய்யாக செலுத்தவும் சிறப்பு ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்திருக்கிறது. அண்ணாமலையார் கோவிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தர உள்ளதால், காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.