டெல்லி முதலமைச்சரின் தனிச் செயலாளர் இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை..!

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியினருக்கு தொடர்புடைய சுமார் 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கப்பட்டது. …

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியினருக்கு தொடர்புடைய சுமார் 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கப்பட்டது.  இந்த உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாகவும்,  100 கோடி ரூபாய் கைமாறியதாகவும் எழுந்த புகார் மீதான விசாரணையில் கலால்துறை அமைச்சராக இருந்த மனீஷ் சிசோடியா, ஆம் ஆத்மி மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் தொடர்பு இருப்பதாக  குற்றச்சாட்டு எழுந்தது.  இதனைத் தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொள்ள அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. அதில் விசாரணைக்கு ஆஜராகுமாறு தெரிவித்திருந்தது. ஆனால், சம்மனை வாங்க மறுத்த அரவிந்த் கெஜ்ரிவால், தனக்கு எதிராக சம்மன் அனுப்புவது சட்டவிரோதம் என தெரிவித்து சம்மனை திருப்பி அனுப்பினார்.

இதனைத் தொடர்ந்து மேலும் இரண்டு முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. ஆனால், மூன்றாவது முறையாகவும் அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை. இதனால் அமலாக்கத்துறை அதிகாரிகள் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் சோதனையில் ஈடுபடுவார்கள் எனவும், அவர் கைது செய்யப்படலாம் எனவும் ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் சிலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.இச்செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு பாதுகாப்பிற்காக அவர் வீட்டின் முன் போலீசார் பாதுகாப்பு போடப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து,  5வது முறையாக பிப். 2-ம் தேதி ஆஜராகுமாறு அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. ஆனால், அனைத்து சம்மன்களையும் சட்டவிரோதமானது என கூறி, அரவிந்த் கெஜ்ரிவால் அதனை நிராகரித்தார்.

இதையும் படியுங்கள் : நெல்லை மாநகராட்சி ஆணையருக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக புகார் – இருவர் மீது வழக்குப்பதிவு..!

அண்மையில் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், ‘பாஜகவில் இணைந்தால் விட்டுவிடுகிறோம்’ என்று தனக்கு மிரட்டல் வருவதாக கூறியிருந்தார். இந்நிலையில், இன்று டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியினருக்கு தொடர்புடைய 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டு வருகிறது. அரவிந்த் கெஜ்ரிவாலின் தனிச் செயலாளர் இல்லம் உட்பட பல்வேறு இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.