தர்மபுரியில் திருமன நிகழ்ச்சி ஒன்றில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், “தவெகவை குறைத்து மதிப்பிட்டதுதான் திமுகவின் தோல்விக்கு காரணம். விஜய் ஆர்.எஸ்.எஸ். பெற்றெடுத்த பிள்ளை என பேசினேன். ஆனால் அவர் அதிமுக, பாஜக, பாமகவிடம் ஆதரவு கேட்கவில்லை. காங்கிரஸ் மற்றும் திருமாவளவனிடம் ஆதரவு கேட்டார். கவர்னர் ஆட்சி வந்துவிடக்கூடாது என இடதுசாரிகள் தவெகவுக்கு ஆதரவு அளித்ததால் விசிகவும் தவெகவுக்கு ஆதரவு அளித்தது.
விசிக கூடாரம் காலியாகிவிட்டது, எல்லோரும் விஜய் பின் சென்று விட்டார்கள் என்று தேர்தல் ரிசல்ட் வந்ததும் சொன்னார்கள்; ஆனால் உளுந்தூர்ப் பேட்டை மாநாடு விசிக கட்சி எப்படி என்று உலகத்திற்கே பறைசாற்றியது; தமிழ்நாடே நடுங்கும் அளவிற்கு குவிந்தார்கள். விசிக GEN Z தலைமுறையினருக்கான கட்சியாக வளர்ந்துள்ளது.
பதவி ஆசை இருந்திருந்தால், காங்கிரஸ் போனபோதே நான் போயிருக்க முடியாதா? பதவி ஆசை இருந்திருந்தால், முதலமைச்சர் விஜய் தொடர்புகொண்டு பேசியபோதே நான் இசைந்து கொடுத்திருக்க முடியாதா? திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் நில்லுங்கள் என்று கூறியபோது இசைந்திருக்க முடியாதா? அமைச்சராகுங்கள் என்று கூறியபோது நான் அதை ஏற்றுக்கொண்டிருக்க முடியாதா? இடைத்தேர்தலில் நிற்க மாட்டேன். அமைச்சர் பொறுப்பை ஏற்க மாட்டேன் என்று தொடக்கத்தில் இருந்தே மறுத்தலித்தேன் நான். பிறகு, ஏன் 10 நாட்களுக்குப் பிறகு அந்த முடிவு? என்று கேட்கலாம்; நான் கொள்கைப் பிடிப்போடு இருக்கிறவன் என்று காட்டிக்கொள்வதற்காக, எளியவர் ஒருவரின் அமைச்சராகும் வாய்ப்பைத் தட்டிப் பறித்துவிடக் கூடாது என்று என் ஆழ்மனம் சொன்னது ஆழ்மனம் சொன்னது.
கரூர் சம்பவத்தில் முதல்வர் விஜய் மீது வழக்கு போட சொன்னேன். ஆனால் திமுக வழக்கு போடவில்லை, ஏன் வழக்கு போடவில்லை, அப்போதே விஜயின் அரசியலை அம்பலப்படுத்தியிருக்க வேண்டாமா. ஆனால் திமுக எதுவும் பேசவில்லை.
இடதுசாரிகள் கூட்டணியில் இருந்து விலகியதற்கு திமுகவின் அணுகுமுறையே காரணம். கூட்டணி கட்சிகளை திமுக கையாண்ட விதம்தான் தவறு என எந்த நியாயஸ்தர்களும் பேசவில்லை. திமுக கூட்டணியில் இருந்து விசிக வெளியேறியதற்கு திமுக தான் காரணம்.
வெற்றிக் கூட்டணி… அந்தக் கூட்டணி… இந்தக் கூட்டணி… என என்ன வேண்டுமானாலும் பெயர் வைத்துக்கொள்ளுங்கள்; ஆனால், அதில் ‘மதச்சார்பற்ற’ என்ற சொல் இருக்க வேண்டும் என்ற குரலை உயர்த்திச் சொன்னவன் திருமாவளவன்; ஏனென்றால் மதச்சார்பற்ற என்று போட்டால் தான் மைனஸ் பாஜக, ஆர்எஸ்எஸ் என்று வரும்.




