கோயில் சொத்துகளைத் திருடும் திமுக அரசு – நயினார் நாகேந்திரன் கடும் தாக்கு…!

கள்ளழகர் கோயிலின் உபரி நிதியில் வணிக வளாகங்கள் கட்டுவதற்கு ஒப்புதல் வழங்கிய அரசாணையை ரத்து செய்துள்ள நீதிமன்ற உத்தரவை பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வரவேற்றுள்ளார்.

பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

“திருக்கோயில் சொத்துகளைத் திருடும் கொள்ளை மாடல் அரசு எப்போது திருந்தும்…? மதுரை கள்ளழகர் திருக்கோயிலின் உபரி நிதி ரூ.40 கோடியில் வணிக வளாகங்கள் கட்டுவதற்கு ஒப்புதல் வழங்கிய அரசாணையை ரத்து செய்து திமுக அரசின் கொள்ளையைத் தடுத்துள்ளது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை.

திருக்கோயில் நிதி ரூ.107 கோடியில் இருந்து ரூ.62 கோடியாகக் குறைந்துள்ளது தெய்வக்குற்றமாகும் என்று சரியாகச் சுட்டிக்காட்டியதோடு, கோயிலைத் தனிப்பட்ட சொத்தாகக் கருத முடியாது என்று திமுக அரசுக்கு சவுக்கடியும் வழங்கியுள்ளது வரவேற்கத்தக்கது.

அறங்காவலர் குழுவே இல்லாமல் கோயிலை நிர்வகிப்பதில் தொடங்கி கமிஷன் பெறும் நோக்கில், கோயில் நிதியில் வணிக வளாகம் கட்ட முயற்சிக்கும் திமுக  அரசு, ஆட்சி முடியும் தருவாயிலாவது திருந்துமா என்பது கேள்விக்குறியே! கோயில் சொத்து கோயிலுக்கே என்பதை உணராமல், உண்டியல் தொகையில் கல்லா கட்டப் பார்க்கும் திமுக அரசு தனது பேராசையாலேயே அழியும்” என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.