“திமுக அரசு ஒரு கட்சியின் அரசு அல்ல.. இனத்தின் அரசு” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

திமுக அரசு ஒரு கட்சியின் அரசு அல்ல.. இனத்தின் அரசு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற அயலகத் தமிழர் தின விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது,

“உலகின் பல்வேறு நாடுகளில் தமிழர்களாகிய நீங்களும், உங்கள் குடும்பத்தார்களும் பல்வேறு முக்கிய பொறுப்புகளில் இருப்பதை நினைத்து நான் பெருமைப்படுகிறேன். நாம் அனைவரும், யாராலும் பிரிக்க முடியாத தமிழ் சொந்தங்கள், தமிழினச் சொந்தங்கள். நாடுகளும், கடல்களும் நம்மை பிரித்தாலும், மொழியும் இனமும் நம்மை உணர்வால் இணைக்கிறது. தமிழ்நாட்டில் வாழும் தமிழர்களுக்கு நன்மை செய்வதுபோலவே, அயல் நாட்டு தமிழர்களிடமும் சகோதர உணர்வுடன் தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது.

மொழி சிதைந்தால் இனம் சிதையும்; இனம் சிதைந்தால் பண்பாடு சிதையும். பண்பாடு சிதைந்தால் அடையாளம் போய்விடும். அடையாளம் போய்விட்டால் தமிழர்கள் எனச் சொல்லும் தகுதியை இழந்துவிடுவோம். வான்புகழ் வள்ளுவர் பிறந்த மண்ணுக்கு சொந்தக்காரர்கள் நாம். வீழ்வது நாமாக இருப்பினும், வாழ்வது தமிழாக இருக்கட்டும். மொழிப்பற்று, இனப்பற்று நமக்கு உண்டு, அது மொழிவெறி, இனவெறியாக மாறாது.

4,000 ஆண்டுகள் பழமையான வரலாற்றுக்கு சொந்தக்காரர்கள் நாம் என்பது உறுதியாகி இருக்கிறது. நமக்குள் எந்தப் பிளவும் ஏற்படுவதற்கு அனுமதிக்கக்கூடாது. நாட்டிலேயே அதிக அளவு அகழாய்வு நடைபெற்ற மாநிலம் தமிழ்நாடு. தி.மு.க. அரசு ஒரு கட்சியின் அரசு அல்ல, இனத்தின் அரசு. எங்கு வாழ்ந்தாலும் தமிழர்கள் ஒற்றுமையுடன் வாழ வேண்டும்”

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.