உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு – அயலக வாழ் தமிழர்கள் நல வாரிய உறுப்பினர் மீரான் பிரத்யேக பேட்டி!

குவைத் தீ விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அயலக வாழ் தமிழர்கள் நல வாரிய உறுப்பினர் மீரான் நியூஸ் 7 தமிழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். குவைத் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தில்…

குவைத் தீ விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அயலக வாழ் தமிழர்கள் நல வாரிய உறுப்பினர் மீரான் நியூஸ் 7 தமிழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

குவைத் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தில் 40 இந்தியர்கள் உள்பட 49 பேர் உயிரிழந்துள்ளனர்.  இதில் 11 பேர் கேரளாவை சேர்ந்தவர்கள் என்றும் 5 பேர் தமிழர்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.  மேலும் தீ விபத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.  இதனிடையே, தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் உடலை இந்தியாவிற்கு கொண்டு வரவும்,  மேலும் அங்கு சிக்கியுள்ளவர்களை மீட்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

குவைத் தீ விபத்து தொடர்பாக அயலக வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தானுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனையில் ஈடுபட்டார்.  அயலக தமிழர் நலத்துறை எடுத்து வரும் நடவடிக்கைகளை குறித்து அமைச்சர் செஞ்சி மஸ்தானிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளரக்ளை சந்தித்த அமைச்சர் செஞ்சி மஸ்தான்  குவைத் தீ விபத்தில் தமிழகத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்ததாக தெரிவித்தார்.  ராமநாதபுரத்தைச் சேர்ந்த கருப்பணன்,  சின்னத்துரை,  வீராசாமி மாரியப்பன்,  செஞ்சியை சேர்ந்த முகமது ஷெரீப்,  தஞ்சையைச் சேர்ந்த புனாஃப் ரிச்சர்டு ராய் ஆகியோர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்டமாக தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

இந்த நிலையில் அயலக வாழ் தமிழர்கள் நலத்துறை ஆணையத்தின் உறுப்பினர் எஸ்.எஸ்.மீரான் நியூஸ் 7 தமிழுக்கு காணொலி வாயிலாக பிரத்யேக நேர்காணலை வழங்கினார்.  இது தொடர்பாக அவர் தெரிவித்ததாவது..

“ தரைத் தளத்தில் சமையல் செய்து கொண்டிருந்த போது திடீரென சிலிண்டர் வெடித்ததால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 5 பேர் வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.  உயிரிழந்த தமிழர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது” என மீரான் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.