தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்து, காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக மாறி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நேற்று காலை நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று நள்ளிரவு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்ததாக தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், அது இன்று காலை மேலும் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியுள்ளதாக கூறியுள்ளது.
இது அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு திசையில் தமிழக கடற்கரையை நோக்கி நகர்ந்து மேலும் வலுவிழக்கக் கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. இதன் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியின் கடலோர மாவட்டங்களிலும், உள் மாவட்டங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என தெரிவித்துள்ளது. மேலும், நாளையும், நாளை மறுநாளும் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னையை பொறுத்தவரை, அடுத்த 12 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைபெய்ய வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடலோர மாவட்டங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வரையிலான வேகத்தில் வீசக்கூடும் என்று தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், இப்பகுதிகளுக்கு நாளை காலை வரை மீனவர்கள் செல்ல வேண்டாமென்றும் அறிவுறுத்தியுள்ளது.







