இலவசங்கள் தவறு என்னும் வாதமே தவறு என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை, சைதாப்பேட்டையில் உள்ள ஜெயகோபால் கரோடியா பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவில் பங்கேற்ற மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.
அதைத்தொடர்ந்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் மா சுப்பிரமணியன்,
தமிழ்நாடு முழுவதும் அரசின் சார்பில் மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கும்
திட்டம் தொடங்கி மிதிவண்டிகள் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த காலங்களில் வழங்கப்பட்ட மிதிவண்டிகளைவிட வலுவான தரமான மிதிவண்டிகள்
வழங்கப்படுகின்றன. செப்டம்பர் 30 ஆம் தேதியுடன் பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக
வழங்குவதை மத்திய அரசு நிறுத்திக்கொள்கிறது. அதன் பின்னர் தனியார்
மருத்துவமனைகளில் கட்டணம் செலுத்தி போட்டுக்கொள்ளும் சூழல் இருப்பதால்
மக்கள் தற்போதே பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொண்டு பயன்பெற வேண்டும்.
செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு ஒத்துழைப்பு கொடுத்து சிறப்பாக போட்டியை
நடத்தியது போன்று தற்போது சென்னையில் நடைபெற உள்ள சர்வதேச டென்னிஸ் போட்டி உட்பட சர்வதேச போட்டிகள் அனைத்தும் சிறப்புடன் நடைபெற மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வு துறை முழு ஒத்துழைப்பு வழங்கும். இலவசங்கள் தவறு என்னும் வாதம் தவறு, யாருக்கு கொடுக்கிறோம் என்பது முக்கியம். இதனை சரியாக செயல்படுத்தியதால் தான் இன்று தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது என்றார்.
-ம.பவித்ரா








