சேலத்தில் இன்று தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம்!

தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் இன்று சேலத்தில் நடைபெறுகிறது.

சேலம் மாவட்ட தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் சீலநாயக்கன்பட்டியில் இன்று நடைபெற உள்ளது. இன்று மதியம் 12 மணி முதல் 3 மணி வரை நடைபெறும் இந்த கூட்டத்தில் பங்கேற்க தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் இன்று சேலம் வருகிறார்.

இந்த கூட்டத்திற்காக தவெகவினருக்கு காவல்துறை தரப்பில் இருந்து 51 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, விஜய் வேனில் நின்றபடி மட்டுமே பேச வேண்டும்; இருக்கைகள் அமைக்கக்கூடாது. கூட்டத்தில் 5 ஆயிரம் பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும். பங்கேற்கும் அனைவருக்கும் அனுமதி அடையாள அட்டை வழங்க வேண்டும். குழந்தைகளுக்கு அனுமதி இல்லை உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

மேலும் சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டசபை தொகுதிகளில் இருந்து 5 ஆயிரம் நிர்வாகிகளுக்கு மட்டுமே கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதி சீட்டு வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் தவிர யாருக்கும் கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பெண்கள், கர்ப்பிணிகள், வயது முதிர்ந்தவர்கள் மற்றும் உடல்நிலை சரியில்லாதவர்கள் இந்நிகழ்ச்சிக்கு வர வேண்டாம்; வீட்டில் இருந்தபடி தொலைக்காட்சி மற்றும் சமூக வலைத்தளங்களில் இந்நிகழ்ச்சியை நேரலையாகக் காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.