“அந்த தருணம் என் வாழ்க்கையில் மறக்க முடியாதது” – ‘கான் சிட்டி’ பட விழாவில் நடிகர் அர்ஜுன் தாஸ் பேச்சு…!

‘கான் சிட்டி’ திரைப்படக்குழுவின் நன்றி அறிவிப்பு விழா இன்று நடைபெற்றது.

அர்ஜூன் தாஸ் நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் ‘கான் சிட்டி’. அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கியுள்ள இப்படத்தை பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. கடந்த ஜூன் 26 ஆம் தேதி வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்த நிலையில் ‘கான் சிட்டி’ திரைப்படக்குழுவின் நன்றி அறிவிப்பு விழா இன்று நடைபெற்றது.

இந்த நிகழ்வில் படத்திற்கு ஆதரவு அளித்த ரசிகர்கள், திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் ஊடகங்களுக்கு படக்குழுவினர் நன்றியைத் தெரிவித்தனர்.

விழாவில் நடிகர் அர்ஜுன் தாஸ் பேசியதாவது :

படத்தின் முதல் காட்சி முடிந்தபிறகு வெளியே நின்றிருந்த அந்த சில நிமிடங்கள், தேர்வு முடிவுக்காக காத்திருக்கும் மாணவரின் பதற்றத்தைப் போலவே இருந்தது. படம் எப்படி ஏற்றுக்கொள்ளப்படும் என்ற எதிர்பார்ப்பு எங்களுக்கு இருந்தது. ஆனால், சிறிது நேரத்தில் பத்திரிகையாளர்கள் அனைவரும் சிரித்த முகத்துடன் வந்து படத்தைப் பாராட்டிய அந்த தருணம் என் வாழ்க்கையில் மறக்க முடியாத நினைவாக இருக்கும்.

இந்தக் கதாபாத்திரத்தை எனக்கு வழங்கிய ஹரிஷுக்கு நன்றி. இவ்வளவு மூத்த மற்றும் திறமையான கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றியது எனக்கு பெருமை. அவர்களுடன் என் பெயரும் ஒரே போஸ்டரில் இடம்பெற்றதே எனக்கு மிகப்பெரிய அங்கீகாரமாக உணர்கிறேன். எடிட்டர் அருள் மோசஸ், நடன இயக்குநர் சந்தோஷ் மாஸ்டர், இசையமைப்பாளர் ஷான் ரோல்டன், இமான் அண்ணாச்சி உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள், ரசிகர்கள், குறிப்பாக குடும்ப ரசிகர்கள் மற்றும் குழந்தைகள் அனைவருக்கும் என் இதயப்பூர்வமான நன்றிகள். திரையரங்குகளில் குழந்தைகள் வந்து தங்களுடைய கருத்துகளைப் பகிர்ந்துகொண்டதும், குடும்ப ரசிகர்கள் இந்தப் படத்தை மனதார பாராட்டியதும் என்னை மிகவும் உணர்ச்சிவசப்பட வைத்தது.

இந்த அன்பும் ஆதரவும், எதிர்காலத்தில் இன்னும் சிறப்பாக உழைக்க வேண்டும் என்ற பொறுப்பை எனக்கு அளித்துள்ளது. தொடர்ந்து நல்ல படங்களை உங்களுக்காக வழங்குவேன். அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை மனமார்ந்த நன்றிகள்.

நடிகை வடிவுக்கரசி பேசியதாவது :

நான் இன்று உங்கள் முன் நிற்பதே ஒரு மறுபிறவி கிடைத்ததுபோல. அதற்குக் காரணமான அனைவருக்கும் இந்த தருணத்தில் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்று “கான் சிட்டி” திரைப்படத்தின் 25-வது நாள் வெற்றி விழாவில் இருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. நான் திரையுலகில் நடிக்கத் தொடங்கிய காலத்தில், 25 வாரங்கள், 50 வாரங்கள், 100 நாட்கள், 175 நாட்கள் என படங்கள் ஓடி வெற்றி கொண்டாடப்பட்டன. இன்று 25-வது நாள் விழாவாக இருந்தாலும், அந்த மகிழ்ச்சி அதே அளவுக்கு இருக்கிறது. இந்த வெற்றிக்கு காரணம் ரசிகர்களும், ஊடக நண்பர்களும் தான். உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு, “வடிவுக்கரசி அம்மா மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்” என்று பலரும் எழுதியிருந்தார்கள். அந்தப் பாராட்டுகளை நான் மீண்டும் மீண்டும் படித்தேன். அவை எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் அளித்தன. ஆனால், ஊடக நண்பர்களிடம் ஒரு சிறிய வேண்டுகோள் இருக்கிறது. “வடிவுக்கரசி நன்றாக நடித்திருக்கிறார்” என்று மட்டும் எழுதாமல், “இவருக்கு இன்னும் அதிகமான வாய்ப்புகள் கொடுக்க வேண்டும்” என்றும் எழுதுங்கள். அந்த ஒரு வரிதான் எங்களைப் போன்ற கலைஞர்களுக்கு அடுத்த வாய்ப்பை பெற்றுத் தரும்.

இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் பேசியதாவது:

இன்றைய காலகட்டத்தில் ஒரு சிறிய திரைப்படம் வெற்றி பெறுவது மிகவும் கடினமான விஷயம். குறிப்பாக கொரோனாவிற்குப் பிறகு ஓடிடி தளங்களின் வருகையால், சிறிய படங்களை மக்கள் திரையரங்கிற்கு வரவழைப்பது பெரிய சவாலாக மாறிவிட்டது. பெரும்பாலான திரைப்படங்கள் 25 நாட்கள் திரையரங்குகளில் ஓடுவதில்லை. சில நாட்களிலேயே ஓடிடி தளங்களுக்கு வந்துவிடுகின்றன. அதனால், “கான் சிட்டி” திரைப்படத்தின் 25-வது நாள் வெற்றியை உங்களுடன் இணைந்து கொண்டாடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

இந்தப் படத்தை வெற்றிப்படமாக மாற்றிய ரசிகர்கள், பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி.

ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு, கடனில் சிக்கித் தவிக்கும் குடும்பத்துக்கு எதிர்பாராத விதமாக பணம் அச்சிடும் இயந்திரம் கிடைப்பதைத் தொடர்ந்து நடைபெறும் சுவாரஸ்யமான சம்பவங்களை நகைச்சுவை, பரபரப்பு மற்றும் குடும்ப உணர்வுகளுடன் கலந்து சொல்லியிருந்த “கான் சிட்டி”, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று, தற்போது திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.