பீஸ்ட் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியைக் கலாய்த்து, இந்திய விமானப் படையின் ஓய்வுபெற்ற பைலட் சிவராம் சஜன் ட்விட்டரி்ல் வெளியிட்ட பதிவு வைரலாகி வருகிறது.
இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் 13ஆம் தேதி வெளியிடப்பட்டது. ரூ. 250 கோடிக்கும் மேல் வசூலை அள்ளிய இத்திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. அதேசமயம் விஜய் ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடி தீர்த்தனர். இத்திரைப்படம் வெளியான முதல் வாரத்தில் மக்களிடம் அதிக வரவேற்பு பெற்றிருந்த நிலையில், இரண்டாவது வாரத்தில் கேஜிஎஃப் 2 படத்தின் ரிலீஸுக்கு பிறகு அதிக கவனம் பெறவில்லை.
இப்படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகன், யோகிபாபு உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இதில், விஜய் ரா ஏஜெண்டாக நடித்திருந்தார். மால் ஒன்றில் தீவிரவாதிகளால் கடத்தப்படும் மக்களைக் காப்பாற்றும் விஜய், தீவிரவாதிகளின் தலைவனை தேடிச் சென்று பிடித்து வருவதுதான் படத்தின் கதை. இப்படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் தீவிரவாதிகளைப் பிடிப்பதற்காக போர் விமானத்தை ஓட்டிச் செல்லும் விஜய், தீவிரவாதிகளின் தலைவனை கட்டி தூக்கி வருவார். இந்த க்ளைமாக்ஸ் காட்சி அதிக விமர்சனத்துக்குள்ளாகி வந்தது.
I have so many questions…. pic.twitter.com/zVafb6uAnm
— sajan (@sajaniaf) May 15, 2022
இந்நிலையில், ஓய்வுபெற்ற விமானப் படை அதிகாரி சிவராமன் சஜன் ட்விட்டர் பக்கத்தில், விஜய் போர் விமானத்தை ஓட்டிச் செல்லும் க்ளைமாக்ஸ் காட்சியைப் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் போர் விமானத்தில் பறக்கும் விஜய் எதிரிகள் சிலரை நேருக்கு நேர் மோதிவிட்டு, வெல் டன் சொல்லும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோவை பகிர்ந்து, எனக்கு நிறைய கேள்விகள் உள்ளன என அவர் பதிவிட்டுள்ளார்.
இதற்கு பல்வேறு தரப்பினரும் ட்விட்டரில் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்திய சினிமாவில் இதுபோன்ற காட்சிகள் இடம்பெறுவது புதிதல்ல. என்னதான் சினிமாவாக இருந்தாலும் லாஜிக் என்பது வேண்டாமா. ஒரு மாஸ் நடிகரின் படத்தில் இப்படியா செய்வது. சாதாரண மக்களால் போர் விமானத்தைக் கையாள முடியாது. ஆனால், இப்படத்தில் விஜய் சர்வசாதாரணமாக போர் விமானத்தை இயக்குவதாகக் காட்டப்பட்டுள்ளது ஓவராக உள்ளது என்றும், படத்தில் லாஜிக் எல்லாம் பார்க்கக் கூடாது என்றும் பலரும் விமர்சித்து வருகின்றனர். இந்த வீடியோவை 2,45,000க்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர். பல்வேறு எதிர்வினைகளையும் பெற்றுள்ளது.







