ரஜினியின் 170-வது படத்தின் படப்பிடிப்பு திருவனந்தபுரத்தில் தொடங்கியதாக படக்குழு தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் போஸ்டர் வெளியிட்டுள்ளது.
அதே போல், நடிகர்கள் ஃபஹத் ஃபாசில் மற்றும் ராணா டகுபதி இருவரும் இணைய உள்ளதாக லைகா நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில் இன்று அறிவித்துள்ளது. தற்போது இந்தக் கூட்டணியில் பாலிவுட் பிக் பி எனப்படும் அமிதாப் பச்சன் நடிக்கிறார் என்று லைகா நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த 1991ம் ஆண்டில் வெளியான ‘ஹம்’ படத்தில் கடைசியாக ரஜினியும் அமிதாப்பும் இணைந்து நடித்திருந்தனர். தற்போது 32 ஆண்டுகளுக்கு பின் ரஜினியும் அமிதாப் பச்சனும் இணைந்து நடிக்கவுள்ளனர்.
படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பிற்காக திருவனந்தபுரத்தில் செட் அமைக்கும் பணிகள் கடந்த 10 நாள்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வந்தன. ரஜினிகாந்த் படப்பிடிப்புக்காக சென்னையில் இருந்து புறப்பட்டு திருவனந்தபுரத்துக்கு நேற்று சென்றார்.
விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இப்படம் நல்ல கருத்துள்ள பிரம்மாண்ட பொழுதுபோக்கு திரைப்படமாக இருக்கும்” என்றார்.
இந்நிலையில், ரஜினி 170-வது படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளதாக போஸ்டர் வெளியிட்டு படக்குழுவினர் அறிவித்துள்ளனர். திருவனந்தபுரத்தில் நடிகர் ரஜினிகாந்த் சம்மந்தப்பட்ட காட்சிகளை மட்டும் படமாக்க உள்ளனர். அது முடிந்ததும் படத்தின் மற்ற படப்பிடிப்பை கன்னியாகுமரி, நாகர்கோயில் உள்ளிட்ட பகுதிகளில் நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.









