தாய்லாந்து : மதுபான விடுதியில் தீ விபத்து – 30 பேர் உயிரிழப்பு!

தாய்லாந்தில் இரவு நேர மதுபான விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 30 பேர் உயிரிழந்துள்ளனர்.

தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக்கில் வடக்கு பகுதியில் அமைந்துள்ள இரவு நேர ​​மதுபான விடுதி ஒன்றில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் இதுவரை 27 உயிரிழந்தனர். மேலும் இந்த சம்பவத்தில் 73 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர்களில் 25 பேர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 32 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.

மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று பாங்காக்கின் பேரிடர் நிர்வாகம் தெரிவித்திருந்தது. மேலும் சில வெளியேறும் வழிகள் தடுக்கப்பட்டிருந்ததாகவும், கதவுகள் பூட்டப்பட்டிருந்தாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக அந்நாட்டு காவல்துறை விசாரித்து வருகிறது. இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பாங்காக் கேளிக்கை விடுதி தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்றுவருபவர்களில் மேலும் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.