தை அமாவாசை | புண்ணிய ஸ்தலங்களில் குவிந்த மக்கள்… முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு!

தை அமாவாசையை ஒட்டி மக்கள் புண்ணிய ஸ்தலங்களில் குவிந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்து வருகின்றனர்.

முன்னோர்களுக்கு தை அமாவாசை தினத்தில் தர்ப்பணம் கொடுத்து வழிபட்டால் அவர்கள் மனம் மகிழ்ந்து ஆசி வழங்குவார்கள் என்பது மக்களின் நம்பிக்கையாக உள்ளது. இவ்வாறு செய்வதன் மூலம் பாவங்கள், தோஷங்கள் மட்டுமல்ல நம்முடைய முன்னோர்கள் செய்த பாவங்களும் நீங்கி விடும் என்று நம்பப்படுகிறது.

இந்த நிலையில் இன்று தை அமாவாசையை முன்னிட்டு தமிழ்நாடு மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் தங்களின் முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர்.

அக்னி தீர்த்தக் கடற்கரையில் புனித நீராடி விட்டு தம்முடன் வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு எள்ளு பிண்டம் வைத்து திதி தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்தி வருகின்றனர். தொடர்ந்து கோயிலுக்குள் உள்ள 22 புண்ணிய தீர்த்தங்களிலும் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

அதேபோல், உலகப்புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் கடற்கரையில் பொதுமக்கள் இன்று அதிகாலை முதலே குவிந்து வருகின்றனர். அவர்கள் கடற்கரையில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்தி வருகின்றனர்.

மயிலாடுதுறையில் பதினாறு தீர்த்த கிணறுகளுடன் அமைந்துள்ள உலகப் புகழ் பெற்ற காவிரி துலா கட்ட ரிஷப தீர்த்தத்தில் தை அமாவாசையை முன்னிட்டு ஏராளமான மக்கள் குவிந்து வருகின்றனர். அவர்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு மேற்கொண்டு வருகின்றனர்.

இதேபோல், குற்றாலம், வேதாரண்யம், பூம்புகார், வைகை ஆற்றங்கரை, கோபாலசமுத்திரங்கரை உள்ளிட்ட பகுதிகளிலும் பொதுமக்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்து தர்ப்பணம் செய்து வருகின்றனர். இதனால், கடற்கரைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.