மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் சுதந்திரப் போராட்ட வீரருமான என். சங்கரய்யாவுக்கு தமிழக அரசின் முதலாவது ’தகைசால் தமிழர்’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழுக்கும் தமிழனத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களை பெருமைப்படுத்தும் விதமாக ’தகைசால் தமிழர்’ என்ற விருது வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என்.சங்கரய்யாவுக்கு அந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ்நாட்டுக்கும் தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில் தகைசால் தமிழர் என்ற பெயரில் புதிய விருதை உருவாக்கவும் இந்த விருதுக்கான விருதாளரைத் தேர்வு செய்ய குழுவை அமைத்திடவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டிருந்தார்.
இவ்விருதுக்கான விருதாளரைத் தேர்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவின் கலந்தாலோசனைக் கூட்டம் சென்னை, தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. அக்கூட்டத்தில், இளம் வயதிலேயே பொதுவாழ்க்கையில் ஈடுபட்டு, மாணவத் தலைவராகவும் சுதந்திரப் போராளியாகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் அரும்பணியாற்றியதுடன், தமிழ்நாட்டுக்கும் தமிழினத்தின் வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றி சமீபத்தில் 100 வயதை அடைந்த தமிழர், மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என். சங்கரய்யாவைப் பெருமைப்படுத்தும் வகையில் தகைசால் தமிழர் விருதுக்கு அவரது பெயர் பரிசீலிக்கப்பட்டு அவருக்கு இவ்விருதை வழங்க முடிவு செய்யப்பட்டது.
தகைசால் தமிழர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட என். சங்கரய்யாவுக்கு 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையும் பாராட்டு சான்றிதழும் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி நடைபெறும் சுதந்திர தின விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலினால் வழங்கப்படும்.
இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது,








