மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம்! இஸ்ரேலில் உள்ள இந்தியர்களுக்கு எச்சரிக்கை!

இஸ்ரேல் – ஈரான் இடையே பதற்றம் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து,  இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்குமாறும், அந்நாட்டு அரசு வழங்கியுள்ள பாதுகாப்பு நெறிமுறைகளைக் கடைபிடிக்குமாறும் இந்திய தூதரகம் அறிவுறுத்தி உள்ளது. ஹமாஸ் ஆயுதக்…

இஸ்ரேல் – ஈரான் இடையே பதற்றம் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து,  இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்குமாறும், அந்நாட்டு அரசு வழங்கியுள்ள பாதுகாப்பு நெறிமுறைகளைக் கடைபிடிக்குமாறும் இந்திய தூதரகம் அறிவுறுத்தி உள்ளது.

ஹமாஸ் ஆயுதக் குழுவின் தலைவரான இஸ்மாயில் ஹனியி (வயது 62) கடந்த 31ம் தேதி படுகொலை செய்யப்பட்டார்.  ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள வீட்டில் இஸ்மாயில் படுகொலை செய்யப்பட்ட நிலையில், அவரது படுகொலைக்கு இஸ்ரேலை பழிவாங்குவோம் என ஈரான் தெரிவித்தது.

இஸ்ரேலை தடுத்து நிறுத்தாவிட்டால் மத்திய கிழக்கு பகுதி மட்டுமின்றி, உலகத்திற்கே ஆபத்து என ஈரான் வெளியுறவுத்துறை மந்திரி அலி பாகரி கனி எச்சரித்திருந்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது;- “கடந்த பத்து மாதங்களில், இஸ்ரேல் காசா பகுதியில் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. இப்போது இஸ்ரேலின் குற்றங்கள் பெய்ரூட், தெஹ்ரான் மற்றும் ஏமன் வரை விரிந்துள்ளது. இஸ்ரேலை தடுத்து நிறுத்தாவிட்டால், மத்திய கிழக்கு பகுதியின் அமைதிக்கும், பாதுகாப்பிற்கும் பாதிப்பு ஏற்படுவது மட்டுமின்றி, உலகத்திற்கே ஆபத்தாகும்” என்றார். இதனால், இஸ்ரேல் – ஈரான் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரகம், இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் அனைவரும் விழிப்புடன் இருக்குமாறும்,  அந்நாட்டு அரசு வழங்கியுள்ள பாதுகாப்பு நெறிமுறைகளைக் கடைபிடிக்குமாறும் அறிவுறுத்தி உள்ளது. மேலும், இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் அனைவரும் அவசர உதவிக்கு தொடர்பு கொள்ள தொலைபேசி எண்களை வெளியிட்டுள்ளதோடு, தூதரகத்தில் பதிவு செய்யாதவர்கள் உடனடியாக பதிவு செய்யுமாறும் கூறியுள்ளது.

முன்னதாக,  லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள இந்திய தூதரகமும், இந்தியர்கள் யாரும் லெபனானுக்கு பயணிக்க வேண்டாம் என அறிவுறுத்தியதோடு, அங்குள்ள இந்தியர்கள் அனைவரும் நாட்டை விட்டு வெளியேறுமாறும் அறிவுறுத்தியது குறிப்பிடத்தக்கது. 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.