சிம்புவின் பத்து தல; சிலருக்கு திரையரங்கில் அனுமதி மறுப்பா? இணையத்தில் வைரலாகும் வீடியோ

சிம்புவின் பத்து தல திரைப்படத்தை பார்க்க வந்த சிலருக்கு சென்னை ரோகிணி திரையரங்கில் அனுமதி மறுக்கப்பட்டதால் ரசிகர்களுக்கும், திரையரங்கு ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. கடந்த 2017ம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகி, மாபெரும் வெற்றி…

சிம்புவின் பத்து தல திரைப்படத்தை பார்க்க வந்த சிலருக்கு சென்னை ரோகிணி திரையரங்கில் அனுமதி மறுக்கப்பட்டதால் ரசிகர்களுக்கும், திரையரங்கு ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

கடந்த 2017ம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகி, மாபெரும் வெற்றி பெற்ற ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படமான ‘மஃப்டி’ யின் ரீம்மேக் தான் பத்து தல. இப்படத்தில், சிம்பு கேங்ஸ்டராகவும் கவுதம் கார்த்திக் போலீஸ் அதிகாரியாகவும் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை ‘சில்லுனு ஒரு காதல்’, ‘நெடுஞ்சாலை’ போன்ற படங்களை இயக்கிய கிருஷ்ணா இயக்கியுள்ளார்.

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருந்து பத்து தல திரைப்படம் இன்று வெளியானது. காலை 8 மணி முதல் காட்சியை காண சென்னை கோயம்பேடு ரோஹிணி திரையரங்கில் ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். இதையடுத்து சிம்பு ரசிகர்கள் ரோகிணி திரையரங்கில் டிஜே இசையுடன், நடனமாடி தாரை தப்பட்டை முழங்க பட்டாசு வெடித்து சிம்புவின் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், சென்னை ரோகிணி திரையரங்கில் சிம்பு நடித்துள்ள பத்து தல படத்தை பார்க்க வந்த சிலரை, அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் படம் பார்க்க உள்ளே அனுமதிக்கவில்லை. அவர்களிடம் டிக்கெட் இருந்தும் படம் பார்க்க உள்ளே அனுமதிக்காத ஊழியர்களுடன் ரசிகர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் படம் பார்க்க உள்ளே அனுமதிக்கப்பட்டனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.