பற்களை பிடுங்கிய விவகாரம் : ஏ.எஸ்பி பல்வீர் சிங் மீது மேலும் ஒரு வழக்கு

பற்களை பிடுங்கிய விவகாரத்தில் ஏ.எஸ்பி பல்வீர் சிங் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதிக்குட்பட்ட காவல்நிலையங்களில், விசாரணை கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

பற்களை பிடுங்கிய விவகாரத்தில் ஏ.எஸ்பி பல்வீர் சிங் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதிக்குட்பட்ட காவல்நிலையங்களில், விசாரணை கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக விசாரணை நடத்த ஐஏஎஸ் அதிகாரி அமுதா நியமிக்கப்பட்டார். ஏற்கனவே முதல் கட்ட விசாரணையை நிறைவு செய்த அமுதா, 2வது கட்ட விசாரணையை தொடங்கினார்.

விசாரணையின் போது, மாரியப்பன், சுபாஷ், இசக்கிமுத்து, வேத நாராயணன், செல்லப்பா மற்றும் மாரியப்பன் ஆகிய 6 பேர் ஆஜராகினர். இந்த 6 பேருடன்  எதிர் தரப்பினரும் விசாரணைக்கு நேரில் வருகை தந்த நிலையில், மொத்தம் 12 பேர் விசாரணைக்கு ஆஜராகினர்.

இதனிடையே, விசாரணை நடைபெற்ற அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் காவல்துறையினருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அங்கு நின்றிருந்த உளவு பிரிவு காவல்துறையினரும் வெளியேற்றப்பட்டனர். காவல்துறை மீதான குற்றச்சாட்டு தொடர்பான விசாரணையால், காவலர்களை வெளியேற்றி அமுதா விசாரணை மேற்கொண்டார்.

ஏஎஸ்பி பல்வீர் சிங் மீது திருநெல்வேலி குற்றப்பிரிவு போலீசார் இந்திய தண்டனைச் சட்டம், 324 (பயங்கரமான ஆயுதம் அல்லது வேறு வகைகளில் காயம் ஏற்படுத்துதல்), 326 (தன்னிச்சையாக பயங்கரமான ஆயுதத்தால் அல்லது வேறு வகைகளில் கொடுங்காயம் ஏற்படுத்துதல்) மற்றும் 506(1) (கொலை மிரட்டல்) ஆகிய பிரிவுகளின் கீழ் ஏஎஸ்பி பல்வீர் சிங் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த நிலையில் கல்லிடைகுறிச்சி காவல் நிலையத்தில் பல்பிடுங்கப்பட்டு பாதிக்கப்பட்டதாக ஐயன் சிங்கம்பட்டியை சேர்ந்த சூர்யா அளித்த புகாரின் அடிப்படையில் சிபிசிஐடி போலீசார் 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் ஏ.எஸ்பி பல்வீர் சிங், ஆய்வாளர் ராஜகுமாரி, காவலர்கள் ராமலிங்கம், ஜோசப் ஆகியோர் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.