11 மாநிலங்களில் 56,611 பள்ளிகளில் தமிழ் மொழி கற்பிக்கப்படுகிறது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்விக்கு மத்திய அரசு பதிலளித்துள்ளது.
நாடாளுமன்ற மாநிலங்களவையில் பா.ம.க. உறுப்பினர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் எழுப்பிய வினாவுக்கு மத்திய கல்வித் துறை இணையமைச்சர் அன்னப்பூர்ணா தேவி எழுத்து மூலம் அளித்த பதிலில் இந்த விவரம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தமிழ்நாட்டில் 55,356 பள்ளிகளில் தமிழ் கற்பிக்கப்படுகிறது. தமிழ்நாட்டுக்கு வெளியில் அதிகபட்சமாக புதுச்சேரியில் 666 பள்ளிகளிலும், கேரளத்தில் 254 பள்ளிகளிலும், கர்நாடகத்தில் 132 பள்ளிகளிலும், ஆந்திரத்தில் 108 பள்ளிகளிலும் தமிழ் மொழி பாடமாக கற்பிக்கப்படுகிறது.
மராட்டியத்தில் 49, அந்தமான் நிகோபர் தீவுகளில் 21, தெலங்கானாவில் 12, தில்லியில் 11, குஜராத் மற்றும் சண்டிகரில் தலா 1 பள்ளியிலும் தமிழ் மொழி கற்றுத்தரப்படுகிறது.
இந்தியாவில் உள்ள எந்த பல்கலைக்கழகத்திலும் பல்கலைக்கழக மானியக்குழுவின் சார்பில் தமிழ் இருக்கைகள் அமைக்கப்படவில்லை. அதே நேரத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சிக்காக சென்னையில் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் தொடங்கி செயல்பட்டு வருகிறது என்று தெரிவித்த மத்திய அமைச்சர் அன்னப்பூர்ணா தேவி, அந்த அமைப்புக்கு கடந்த 5 ஆண்டுகளில் ஒதுக்கப்பட்ட நிதியின் விவரங்களையும் வெளியிட்டார்.
இதனிடையே, பழங்குடியினர் பட்டியலில் குரும்பா, குரும்பர் ஆகிய சாதிகளை சேர்ப்பது குறித்த தமிழக அரசின் பரிந்துரை இந்திய தலைமைப் பதிவாளர் அலுவலகத்தின் ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.
அன்புமணி ராமதாஸ், பழங்குடியினர் பட்டியலில் குரும்பா, குரும்பர்களை சேர்க்க வேண்டும் என்ற தமிழக அரசின் பரிந்துரை மத்திய அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறதா? என்று வினா எழுப்பியிருந்தார்.
அதற்கு எழுத்து மூலம் விடையளித்த மத்திய பழங்குடியினர் நலத் துறை இணையமைச்சர் விஷ்வேஸ்வர் டூடு,’’ பழங்குடியினர் பட்டியலில் புதிய சாதிகளை சேர்ப்பது குறித்த பரிந்துரைகளுக்கு மக்கள்தொகை கணக்கெடுப்பை மேற்கொள்ளும் இந்திய தலைமைப் பதிவாளர் அலுவலகமும், தேசிய பழங்குடியினர் ஆணையமும் ஒப்புதல் அளித்தால் மட்டும் தான் அவை பட்டியலில் சேர்க்கப்படும். 17.10.2016 ஆம் ஆண்டு தமிழக அரசு இது தொடர்பாக அளித்த பரிந்துரைகளில் இருந்து குருமன் சாதி மட்டும் தான் ஏற்கனவே பட்டியலில் 18-ஆவது இடத்தில் உள்ள குருமன்ஸ் சாதியுடன் இணைக்கப்பட்டிருக்கிறது.
குருமன்களுடன் குரும்பா, குரும்பர்கள் ஆகிய சாதிகளையும் சேர்க்க வேண்டும் என்று 27.04.2020 அன்று தமிழக அரசு புதிய பரிந்துரை அளித்துள்ளது. தமிழக அரசின் பரிந்துரை இந்திய தலைமைப் பதிவாளர் அலுவலகத்தின் ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது என்று அமைச்சர் டூடு தெரிவித்தார்.