அரசாணையை பின்பற்றி 24 மணிநேரமும் டீக்கடை நடத்தலாம் – உயர் நீதிமன்ற மதுரைக் கிளை!

அரசாணையை பின்பற்றி 24 மணி நேரமும் டீக்கடை நடத்தலாம் என சென்னை உயர்நீதிமன்ற
மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையை சேர்ந்த பஷீர், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் “களியக்காவிளை பேருந்து நிலையம் எதிரில் 25 ஆண்டுகளாக டீக்கடை நடத்தி வருகிறேன். உணவு பாதுகாப்புத்துறையிடம் முறையான உரிமம் பெற்று உள்ளேன். இந்த வழியாக திருவனந்தபுரம் விமான நிலையத்துக்கு செல்பவர்களில் பெரும்பாலானவர்கள் எங்கள் கடைக்கு வந்து டீ, சிற்றுண்டி சாப்பிட்டு செல்வது வழக்கம்.

அதே போல இங்குள்ள மருத்துவமனை நோயாளிகள் பயன்பெறும் வகையிலும், எந்த இடையூறும் இன்றி டீக்கடையை நடத்தி வருகிறேன். இந்த நிலையில் இரவு 11 மணிக்கு மேல் டீக்கடைகள், உணவகங்கள் செயல்படக்கூடாது என குமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவு பிறப்பித்து உள்ளார். இதனால் நானும், என் கடையில் பணியாற்றும் ஊழியர்களும் கடும் சிரமத்துக்கு ஆளாகிறாம்.

எங்களை போல ஏராளமான வணிகர்கள் பாதிக்கப்படுகின்றனர். என்னுடைய டீக்கடையை 24 மணி நேரமும் நடத்த அனுமதித்து உத்தரவிட வேண்டும்” இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில், மனுதாரரின் கடையை குறிப்பிட்ட நேரத்துக்குள் மூட வேண்டும் என கட்டாயப்படுத்துவது ஏற்புடையதல்ல. அரசாணையை பின்பற்றி மனுதாரர் 24
மணி நேரம் கடையை நடத்த அனுமதிக்கப்படுகிறார். போலீசார் மனுதாரரின்
வியாபாரத்தில் தலையிடக்கூடாது. சட்டம்-ஒழுங்கு பிரச்சினையில் மட்டுமே
குறுக்கிடலாம்” என நீதிபதி உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.