வரும் 2024-ம் ஆண்டுக்குப் பிறகு தமிழகத்தில் அரசியல் சூழல் மாறுபடும்
என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகில் உள்ள காயல்பட்டினத்தில் காயல்
சமூகநீதி பேரவை சார்பில் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. காயல் சமூக
நீதிப் பேரவையின் தலைவர் முகமது அலி தலைமையில் நடைபெற்ற இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், பச்சை தமிழர் கட்சித் தலைவர் சுப.உதயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் திருமாவளவனுக்கு சமூகநீதி காவலர் காயிதே மில்லத் விருது வழங்கப்பட்டது. இந்த விருதினை பெற்றுக் கொண்ட அவர் கூறியதாவது:
பாஜக இந்த நாட்டை மதம் சார்ந்த நாடாக மாற்ற முயற்சிக்கிறார்கள். மேலும் ஒரு அரசு மதம் , இனம், மொழி சார்ந்து இருக்கக் கூடாது. அனைத்து மக்களுக்கும் பொதுவானதாக இருக்கவேண்டும். மேலும் சமூக நீதி காக்கப்பட வேண்டும். அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பதே சமூகநீதி.
தமிழக அரசால் இன்று தொடங்கப்பட்ட மாணவிகளுக்கு மாதம் 1000 வழங்கும் திட்டம்
சமூகநீதிக்கானது. ஆர்எஸ்எஸ் மற்றும் சங்கப் பரிவார அமைப்புகளுக்கு காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் ரீதியான பொதுவான எதிரிகள் என்றாலும் முதல் நிலை எதிரிகள் அல்ல. இந்திய அரசியலமைப்புச் சட்டமே முதல் நிலை எதிரி என்றார் திருமாவளவன்.
மதுரையில் தமிழக நிதி அமைச்சர் கார் மீது காலணி வீசிய விவகாரத்தை சுட்டிக்காட்டி பேசிய அவர், சகிப்புத்தன்மையை பேசுவது திராவிட மாடல் என்றும் சகிப்புத்தன்மையின்மையை பேசுவது ஆரிய மாடல் என்றும் தெரிவித்தார்.
மேலும் வருகின்ற 2024-ம் ஆண்டுக்குப் பிறகு தமிழகத்தில் அரசியல் சூழல் மாறுபடும் என்றும் திருமாவளவன் கூறினார்.








