ஆக்சிஜன் பிரச்னை தொடர்பான சிக்கல்களை தீர்க்க பிரத்யேக கால் சென்டரை தமிழக அரசு அமைத்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதற்கான பாதுகாப்பு நடைமுறைகளையும் தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை மையங்கள் தீவிரமாக இயங்கிவரும் நிலையில், தமிழக மருத்துவமனைகளில் ஆக்சிஜன் உள்ளிட்ட விவகாரங்களில் வெளிப்படை தன்மை இல்லை என பலர் புகார் தெரிவித்தனர்.
இந்த சிக்கல்களை தீர்க்கும் விதமாக, கால் சென்டரை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மருந்து கட்டுப்பாட்டு இயக்குநரின் கீழ் இயங்கும் இந்த கால் சென்டர்கள் 24 மணி நேரமும் செயல்படும் என தெரிவித்துள்ள தமிழக அரசு, ஆக்சிஜன் தேவைப்படும் மருத்துவமனைகள் மற்றும் நர்சிங் ஹோம்கள் 104 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு ஆக்சிஜன் குறித்த பிரச்னைக்கு தீர்வு காணலாம் என தெரிவித்துள்ளது.







