தமிழக அரசு இயற்கை விவசாயத்தில் ஆர்வம் இல்லாமல் உள்ளது என பாஜக மாநில தலைவர் கே.அண்ணாமலை தெரிவித்தார்.
தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வாழ்வுரிமை மாநாடு 3
நாட்களுக்கு நடத்தப்பட்டது. நிறைவு விழாவில் தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர்
கே.அண்ணாமலை கலந்துகொண்டு பேசுகையில், பிரதமரின் கிசான் நிதி தமிழகத்தில் 46 லட்சம் விவசாயிகளுக்கு ஆன்லைன் முறையில் வழங்கப்பட்டுள்ளது. இளைஞர்களுக்கு விவசாயிகளின் மீதான ஆர்வம் இதனால் வந்துள்ளது. உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களை ரூ. 10 லட்சம் வழங்கி ஊக்கப்படுத்தியதால் நீரா போன்ற பானங்கள் விற்பனைக்கு வந்துள்ளன. இந்திய அளவில் விவசாயம் சார்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் அதிக அளவில் வரத் தொடங்கியுள்ளன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
விவசாயிகளை வெறும் வாக்கு வங்கிகளாக கருதியவர்கள் மத்தியில் விவசாயிகளின்
வருமானத்தை இரட்டிப்பாக்க வேண்டும் என்ற சிந்தனையை பிரதமர் மோடி
உருவாக்கினார். கடன் தள்ளுபடிக்காக விவசாயிகள் காத்திருக்காமல் அவர்களின்
விளைபொருட்களை சந்தைப்படுத்தும் வாய்ப்பினை பிரதமர் உருவாக்கினார். 21 பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையைக் கொடுத்துள்ளோம். 2014 ஆம் ஆண்டு
நெல்லுக்கு குறைந்தபட்ச விலை ஒரு குவிண்டாலுக்கு ரூ. 1,310 இருந்தது. தற்போது
ஒரு குவிண்டாலுக்கு ரூ. 2,040 வழங்கப்படுகிறது. சுமார் 56 சதவீதம் நெல்லுக்கு
குறைந்தபட்ச ஆதார விலை உயர்த்தப்பட்டுள்ளது.
கிசான் கிரடிட் கார்டு மூலம் வருடத்திற்கு 3 சதவீத வட்டிக்கு விவசாயிகளுக்கு
கடன் கிடைக்கிறது. தமிழகத்தில் 83 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் கிசான்
கிரடிட் கார்டு மூலம் கடன் பெற்று பயனடைந்து வருகின்றனர். அவினாசி – அத்திகடவு திட்டம் மத்திய அரசின் ரூ. 1,000 கோடி பங்களிப்புடன் தொடங்கி நடைபெற்று 96 சதவீதம் பணிகள் முடிவுற்றுவிட்டன. ஆனால், கடந்த 15 மாதங்களாக திமுக ஆட்சியில் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு குழாய் போட முடியாமல் திட்டம் அப்படியே நிற்கிறது.
மாவட்டந்தோறும் முக்கிய விளைபொருட்களை விற்பனைக்கு சந்தைப்படுத்தும் வகையில்
ஒவ்வொரு ரயில் நிலையத்திற்கு ஒரு விவசாயப் பொருள் விற்பனையாகி வருகிறது.
விவசாயப் பொருட்களை மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றி விற்பனை செய்யும்
வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்திய விவசாயிகளில் 8 ஆண்டுகளாக பட்டினிச் சாவு இல்லை. இந்தியாவின் விவசாய
உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்காக பிரதமர் ரூ. 1 லட்சம் கோடி ஒதுக்கீடு
செய்திருக்கிறார். ஒவ்வொரு வட்டம், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் குளிர்ப்பதன
கிடங்கு இதன் மூலம் உருவாக்கப்படும். மேலும், ரயில்வே கிடங்கு, துறைமுகங்களில் பெரிய அளவிலான கிடங்குகள் உருவாக்கப்பட உள்ளன. வெளிநாட்டில் இருந்து இந்திய சந்தைகளுக்கு வரும் கலிபோர்னியா ஆப்பிள் போல, மத்திய பிரதேசம் மற்றும் காஷ்மீரில் இருந்து அதே தரத்தில் பழங்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். முந்தைய அரசுகள் சரியாக திட்டமிடாத நிலையில், வெளிநாட்டுப் பொருள்கள் இந்திய உணவுச் சந்தையை ஆக்கிரமித்து வருகிறது. அந்த நிலையை மத்திய அரசு மாற்றியமைத்துள்ளது. பெருங்காயம் இஸ்ரேலில் இருந்து ரூ.ஆயிரம் கோடி இறக்குமதி செய்து வந்த நிலை மாறியுள்ளது.
விவசாயிகளுக்கு பிரதமர் மோடி தலைமையிலான அரசு செய்தது போல யாரும் செய்தது இல்லை. இயற்கை விவசாயம் இந்தியாவில் தொடங்கிவிட்டது. சிக்கிமில் 100 சதவீதம் இயற்கை விவசாயம் உள்ளது. இந்திய அளவில் 15 மாநிலங்கள் இயற்கை விவசாயத்தில் தீவிரமாக உள்ள நிலையில், தமிழ்நாடு அரசு இயற்கை விவசாயத்தில் ஆர்வம் இல்லாமல் உள்ளது. இயற்கை விவசாயத்தை இளைஞர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் நம்மாழ்வாருக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் என தமிழக பாஜக செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றி பிரதமருக்கு அனுப்பி உள்ளோம். விவசாயிகளின் தீர்மானங்களை பிரதமரின் கவனத்திற்கு கொண்டு செல்வோம். நம்முடைய விவசாயப் பொருட்கள் மீது நாட்டமில்லாமல் உள்ளனர். இதை மாற்றியமைக்க உள்ளூரை நோக்கிச் செல்வோம் என்ற திட்டத்தை பிரதமர் முன்னெடுத்துள்ளார்.
இந்தியாவில் உள்ள 6 லட்சம் கிராமங்களிலும் அடுத்த 10 வருடங்களில் 5 ஜி , 6 ஜி
தொழில்நுட்பம் வந்துவிடும். நகரங்களுக்கு இணையான அனைத்து வசதிகளும்
கிராமங்களில் வந்துவிடும் போது நகரங்களுக்கு இடம்பெயர்வது தடுக்கப்படும். பி.எஸ்.என்.எல். நிறுவனத்திற்காக ரூ. 1 லட்சத்து 40 ஆயிரம் கோடி ஒதுக்கீடு
செய்யப்பட்டுள்ளது. அடுத்து வரும் பாஜக ஆட்சியில் ராமராஜ்யம் அமைக்கப்படும்.
இது மகாத்மா காந்தியின் கனவு. எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற
ராம ராஜ்யத்தினை மத்தியிலும், மாநிலத்திலும் அமைப்போம். உள்ளூர் உற்பத்தியை
ஊக்குவிக்கும்போது விவசாயம் வளர்ச்சி அடையும் என்றார்.
நிகழ்ச்சியில், பாரதிய ஜனதா கட்சி மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம்,
தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் செ.நல்லசாமி, விவசாய அணித்
தலைவர் ஜி.கே.நாகராஜ், மாநில பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம், பாஜக
எம்.எல்.ஏ. சரஸ்வதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
-ம.பவித்ரா