கட்டுரைகள் தமிழகம்

‘தமிழ்நாடு’ மாநிலம் உருவானது எப்படி?- வரலாறு


த.எழிலரசன்

கட்டுரையாளர்

நம் மாநிலத்திற்கு ‘ தமிழ்நாடு ‘ என்று பெயரிடப்பட்ட நாள் 1967 ஜூலை 18. இந்த வரலாற்று நாளை தமிழ்நாடு நாளாக அறிவித்து சிறப்பித்துள்ளது தமிழ்நாடு அரசு. இன்று மாநிலம் முழுவதும் தமிழ்நாடு நாள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் எந்த மாநிலத்திற்கும் இல்லாத தனிச் சிறப்பு தமிழ்நாட்டிற்கு உண்டு. பெயரிலேயே நாடு என்ற அடையாளத்தைத் தாங்கி கம்பீரமாக எழுந்து நிற்கிறது தமிழ்நாடு. அதற்காக 1956 முதல் 1967 வரை மிக நீண்ட போராட்டங்கள், தியாகங்களைக் கடந்து வந்திருக்கிறது தமிழ்நாடு.

ஆங்கிலேய ஆட்சிகாலத்தில் மெட்ராஸ் பிரெசிடென்சியின் கீழ் கேரளா, கர்நாடா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களும் இருந்தன. 1953 அக்டோபர் மாதம் ஆந்திர மாநிலம் தனியாக பிரிந்தது. 1956ஆம் ஆண்டு மொழிவாரி மாநிலங்களாக பிரிக்கப்பட்டபோது கர்நாடகா, கேரளா மாநிலங்கள் பிரிந்து சென்றன. அந்த சமயத்தில் ‘மெட்ராஸ் ஸ்டேட்’ என்பதை ‘தமிழ்நாடு’ என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்ற குரல்கள் பலமாக எழத் தொடங்கின.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அதற்கு முன்பே 1955 ஆம் ஆண்டு நவம்பர் 29ஆம் தேதி ம.பொ.சி.யின் தமிழரசு கழகம் நடத்திய செயற்குழுவில், தமிழ்நாடு என பெயரிடப்பட வேண்டும் என்கிற தீர்மானத்தை முன்மொழிந்து தமிழ்நாடு பெயருக்கான போராட்ட விதையைத் தூவியது. அடுத்த சில மாதங்களில் 1956 பிப்ரவரி 20ஆம் தேதி தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்ய வேண்டுமென மாநிலம் முழுவதும் அனைத்து கட்சிகளின் சார்பில் முழு அடைப்பு போராட்டமும், வேலை நிறுத்தமும் நடைபெற்றது.

தமிழ்நாடு பெயருக்காக பல்வேறு காலகட்டங்களில் சட்டமன்றத்தில் பலகட்ட விவாதங்கள் நடந்துள்ளன. 1956 மார்ச் 28ஆம் தேதி சென்னை மாகண சட்டமன்றத்தில் மாநில புனரமைப்பு மசோதா கொண்டுவரப்பட்டு விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய சட்டமன்ற உறுப்பினர்கள் சென்னை மாநிலத்துக்கு தமிழ்நாடு என பெயரிடக் கோரினர். அதே ஆண்டு ஜூலை 27ஆம் தேதி தமிழ்நாடு பெயர் மாற்றத்திற்காக சுதந்திர போராட்ட வீரர் சங்கரலிங்கனார் சாகும்வரை உண்ணாவிரதம் தொடங்கினார். தொடர்ந்து 70 நாட்களுக்கு மேலாக உண்ணாவிரதம் இருந்த அவர், தலைவர்கள் சந்தித்து உண்ணாவிரதத்தை கைவிடக் கோரியபோதும் தன் கோரிக்கையில் உறுதியாக நின்றார். விளைவு 1956 அக்டோபர் 13ஆம் தேதி உயிர்நீத்தார். இது தமிழ்நாடு பெயர் மாற்றத்திற்கான போராட்டத்தில் மிகப்பெரிய திருப்புமுனையை உண்டாக்கியது.

1960 ஆகஸ்ட் 19ம் தேதி சோசலிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பி.எஸ்.சின்னதுரை, தமிழ்நாடு பெயர் மாற்ற தீர்மானத்தைக் கொண்டுவந்தார். இந்த தீர்மானம் 1961ஆம் ஆண்டு ஜனவரி 30அம் தேதி விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. விவாதத்தின் மீது பேசிய நிதியமைச்சர் சி.சுப்பிரமணியம், “மெட்ராஸ் ஸ்டேட் என்று சொல்லப்படும் இடத்தில் தமிழ்நாடு என எழுதலாம்” என்ற அறிவிப்பை வெளியிட்டார். குரல் வாக்கெடுப்பின் மூலம் தமிழ்நாடு பெயர் மாற்ற தீர்மானமும் திரும்பப் பெறப்பட்டது. அடுத்த நாள் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்து பேசிய நிதியமைச்சர், “தமிழ்நாட்டு அரசின் வரவு-செலவினை சமர்ப்பிக்கிறேன்” என்றே குறிப்பிட்டே பேசினார்.

1961 ஆம் ஆண்டில் முதன்முறையாக இந்திய நாடாளுமன்றத்தில் மாநிலங்களவையில் சென்னை மாகாணத்திற்குத் ‘தமிழ்நாடு’ என்று பெயரிடவேண்டும் என்று தீர்மானத்தை முன்மொழிந்தார் கம்யூனிஸ்ட் தலைவர் பி.ராமமூர்த்தி. இந்த தீர்மானம் விவாதத்திற்கு வந்தபோது அவர் சிறையில் இருந்ததால் எனவே கம்யூனிஸ்ட் தலைவர் பூபேஷ்குப்தா பி.ராமமூர்த்தி தீர்மானத்தை முன்மொழிந்து உரையாற்றினார். அப்போது அண்ணா ஆற்றிய உரை மிகவும் கவனிக்கத்தக்கதாக மாறியது.

தமிழ்நாடு என்பதற்கான சான்றுகள் பழந்தமிழ் இலக்கியங்கள் உள்பட தமிழில் எங்கெல்லாம் உள்ளது என எடுத்துவைத்த அண்ணா, “தமிழ்நாடு என்ற பெயர் மாற்றத்தின் மூலம் நீங்கள் அடையப்போவது என்னவென்று என்னை கேட்கிறீர்கள். பதிலுக்கு நான் கேட்கிறேன். பார்லிமென்ட் என்பதை லோக்சபா என மாற்றியதன் மூலம் எதை அடைந்தீர்கள்? கவுன்சில் ஆஃப் ஸ்டேட் என்பதை ராஜ்யசபா என மாற்றியதால் என்ன அடைந்தீர்கள்? பிரசிடென்ட் என்பதை ராஷ்டிரபதி என மாற்றியதன் மூலம் என்ன அடைந்தீர்கள்” என்ற கேள்வியை அவர் முன்வைத்தார். நீண்ட விவாதத்திற்கும் பின்னர் அந்த தீர்மானமும் நிராகரிக்கப்பப்ட்டது.

1964ஆம் ஆண்டு தமிழ்நாடு பெயர் மாற்றத்திற்காக அரசியலமைப்பில் திருத்தம் கொண்டு வர வேண்டுமென வலியுறுத்தும் தீர்மானத்தை திமுக சட்டமன்ற உறுப்பினர் இராம. அரங்கண்ணல் கொண்டுவந்தார். தீர்மானத்தின் மீது பேசிய அமைச்சர் ஆர்.வெங்கட்ராமன், தமிழ்நாடு பெயர் மாற்றம் என்பது முடிந்துபோனது. ஏற்கனவே மெட்ராஸ் ஸ்டேட் என வரும் இடங்களில் தமிழ்நாடு என பயன்படுத்தி வருகிறோம்” என்றார். தீர்மானம் ஏற்கப்படாததால் திமுக, சுதந்திரா கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

இந்த நிலையில்தான் 1967ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற பொதுத் தேர்தலில் வெற்றிபெற்ற திமுக, எதிர்க்கட்சி வரிசையிலிருந்து ஆளுங்கட்சி இருக்கையில் அமர்ந்தது. ஆளுங்கட்சியாக காங்கிரஸ் எதிர்க்கட்சியாக மாறியது. திமுக ஆட்சிக்கு வந்த அதே வருடத்தில், 11 ஆண்டுகளாக கோரிக்கைகளுக்கு முடிவுரை எழுதி, தமிழ்நாட்டுக்கான முன்னுரை எழுதினார் முதலமைச்சர் அண்ணா. 1967 ஜூலை 18ஆம் ஆண்டு தமிழ்நாடு பெயர்மாற்றத் தீர்மானத்தை சட்டமன்றத்தில் முன்மொழிந்தார்.

“அரசியலமைப்புச் சட்டத்தில் மாநிலத்தின் பெயரை குறிப்பிடும்போது தமிழ்நாடு என மாற்றி அமைக்கப்பட வேண்டுமென உறுதியாக கருதுவதுடன், அரசியலமைப்பில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ள மாநில அரசு நடவடிக்கை எடுக்க பேரவை பரிந்துரைக்கிறது” என்றார். இதனை வரவேற்றுப் பேசிய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த காங்கிரஸின் கருத்திருமன், “தமிழ்நாடு – மெட்ராஸ் ஸ்டேட் என்று பெயர் இணைந்திருக்க வேண்டும்” என்ற கோரிக்கையை முன்வைத்தார். தீர்மானத்தில் நிறைவுறையாற்றிய அண்ணா, “எதிர்காலத்தில் வரும் தலைமுறையினர், நமது பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் நெடுங்காலத்திற்குப் பிறகு அமர்ந்து பேசுகிற வேளையில் பெருமையோடு சொல்லிக்கொள்ளும் நிகழ்வாக தமிழ்நாடு பெயர் மாற்ற நிகழ்வு அமையும்” என்றார்.

பின்னர் தமிழ்நாடு பெயர் மாற்ற தீர்மானத்தை நிறைவேற்ற அனுமதி கோரினார். அனைத்து உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவுடன் முதலமைச்சர் அண்ணா, “தமிழ்நாடு வாழ்க, தமிழ்நாடு வாழ்க, தமிழ்நாடு வாழ்க” என்று மூன்று முறை முழங்க, அனைத்து உறுப்பினர்களும் வாழ்க என சட்டமன்றம் அதிர முழங்க தீர்மானம் நிறைவேறியது. தமிழ்நாடு பெயர் மாற்ற மசோதா 1968 நவம்பர் 23ம் தேதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, 1969 ஜனவரி 14 பொங்கல் தினம் முதல் தமிழ்நாடு மலர்ந்தது.

தமிழ்நாடு தினமான இன்று அவற்றை நினைவுகூர்வோம்…

– த.எழிலரசன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கேரள இளைஞருக்கு குரங்கு காய்ச்சல்

Halley Karthik

வசூலில் பாகுபலி 2-ஐ விஞ்சுகிறதா கே.ஜி.எஃப்?

Vel Prasanth

தமிழகத்தை 3 மாநிலங்களாக பிரிக்கலாம்: ராமதாஸ் முன்வைக்கும் யோசனை!

EZHILARASAN D