தமிழ் தலைவாஸ் அணியின் கேப்டன் பவன் ஷெராவத் காயம் காரணமாக புரோ கபடி லீக் போட்டிகளில் இருந்து விலகுவதாக அந்த அணியின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
புரோ கபடி போட்டிகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், 12 அணிகள் பங்கேற்கும் 9-வது புரோ கபடி லீக் போட்டிகள் கடந்த அக்டோபர் மாதம் 7 ஆம் தேதி தொடங்கியது. டிசம்பர் மாத இறுதிவரை நடைபெற உள்ள இந்த தொடருக்கான லீக் சுற்று ஆட்டங்கள் பெங்களூரு, புனே மற்றும் ஐதராபாத் ஆகிய 3 நகரங்களில் நடைபெற்று வருகிறது.
இதில், தமிழ் தலைவாஸ் அணியின் முன்னணி வீரரும், கேப்டனுமான பவன் ஷெராவத்துக்கு குஜராத் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் காயம் ஏற்பட்டது. பவன், குஜராத் வீரரை பிடிக்க முயன்றபோது அவரது வலது முழங்காலில் காயம் ஏற்பட்டது. இந்த பலத்த காயத்தால் அவர் அங்கேயே சுருண்டு விழுந்தார். பின்னர் அவரை ஸ்ட்ரெச்சரில் தூக்கி சென்றனர்.
https://twitter.com/tamilthalaivas/status/1588752666838339584
பவன் ஷெராவத்தின் காயம் குறித்து கடந்த சில தினங்களுக்கு முன் பேசிய தமிழ் தலைவாஸ் அணியின் பயிற்சியாளர், பவன் தொடரின் இரண்டாவது சுற்று ஆட்டத்தில் விளையாடுவார் என தெரிவித்திருந்தார். இந்நிலையில், அவரது காயம் காரணமாக புரோ கபடி லீக் போட்டிகளில் இருந்து பவன் ஷெராவத் விலகுவதாக அந்த அணியின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக டிவிட்டரில் தெரிவித்துள்ள பதிவில், பவன் அறுவை சிகிச்சைக்கு பிறகு தற்போது நன்றாக உள்ளதாகவும், எஞ்சிய போட்டிகளில் அவர் விளையாட முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் விரைவில் மீண்டு வருவார் என்றும் தமிழ் தலைவாஸ் அணி டிவிட்டரில் குறிப்பிட்டுள்ளது.
-இரா.நம்பிராஜன்







